அதிகாரிகளின் ஒப்புதலோடு பின்வழியே மணல் திருட்டு?

12 ஆடி 2025 சனி 11:50 | பார்வைகள் : 148
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பகுதியில் முன்வாசல் பூட்டப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்ட பின்னும், பின்வாசல் வழியே சட்டவிரோத மணல் ஆலைகள், குவாரிகளின் நடவடிக்கைகள் தொடர்வதாக புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ஆவேசமடைந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், வரும் 16ல் தற்போதைய நிலை குறித்து கலெக்டர் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
பின்வழியே திருட்டு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திண்டுக்கல் மாவட்டம் சின்ன முத்தனம்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் தாக்கல் செய்த பொதுநல மனு:
திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட, மாவட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. ஆனால், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் மண், தினந்தோறும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் அள்ளப்பட்டு வருகிறது.
இதனால், இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வேடசந்துார் பகுதி நீர்நிலைகளில், சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளு கின்றனர். இவற்றுடன் ரசாயனம் கலப்பதால், 'எம் - சாண்ட்' போல் தோற்றமளிக்கிறது. சிலர் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் ஆலைகள் நடத்துகின்றனர்.
மணல் கலவையை தண்ணீரில் கழுவி, ரசாயனம் கலந்த கழிவுநீரை அருகிலுள்ள நீர்நிலைகளில் விடுகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
கனிமவளத்துறை முதன்மை செயலர், கமிஷனர், திண்டுக்கல் கலெக்டர், கனிமவள உதவி இயக்குநருக்கு புகார் அனுப்பினேன். விதிமீறலுக்கு அபராதம் விதித்து, சட்டவிரோத மணல் ஆலைகள், குவாரிகளை மூட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அரசு வழக்கறிஞர், ''சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய வளாகங்கள் ஏற்கனவே பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முகமது ஹனீப், ''முன்புற வாயில் கதவு அதிகாரிகளால் பூட்டப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்டோர் சட்டவிரோத நடவடிக்கைகளை தொடர பின்புற வாயிலை பயன்படுத்துகின்றனர்,'' என்றார்; அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.
இதை பார்த்து கோபம் அடைந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அதிகாரிகளின் கூட்டு சதியுடன் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றனவா என சந்தேகம் எழுகிறது. குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. கலெக்டர் வரும் 16ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராகி, தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.