வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டி? கூட்டணியினர் அலப்பரையால் முடிவு

13 ஆடி 2025 ஞாயிறு 08:35 | பார்வைகள் : 163
கூட்டணி வலுவாக இருப்பது போன்ற தோற்றத்தை தி.மு.க., ஏற்படுத்த முயன்றாலும், அதிலிருக்கும் கட்சிகள், கூடுதல் தொகுதிகளுக்காக, தேர்தல் நெருக்கத்தில் அணி தாவும் வாய்ப்பு இருப்பதால், தனித்து போட்டியிட தயாராவது குறித்து தி.மு.க., ஆலோசித்து வருகிறது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் இருந்து, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட்கள், வி.சி., - ம.தி.மு.க., மற்றும் முஸ்லிம் இயக்கங்கள் இருந்து வருகின்றன.
அடுத்தடுத்த தேர்தல்களிலும், இதே கூட்டணிக்கு வெற்றி கிடைத்து வருவதால், வரும் சட்ட சபை தேர்தலுக்கும் கொண்டு செல்ல தி.மு.க., தலைமை விரும்புகிறது.
நெருக்கடி
தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகள், அரசியல் ரீதியாக சில நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.
ஆளும் தரப்பிலும், அதிகார மட்டத்திலும் முக்கியத்துவம் இல்லாததோடு, தேர்தலுக்கு தேர்தல் தொகுதிக்காக போராட வேண்டிய நிலையும், குறைந்த தொகுதிகளையே கொடுப்பதால், கட்சியினரை திருப்திபடுத்த முடியாத சோகமும் நீடிப்பதாக கருதுகின்றன.
ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க., இருந்தபோதும், கூட்டணி கட்சியினருக்கு, அரசு பதவிகள் எதுவுமே கிடைக்கவில்லை. அது கிடைத்தாலாவது, கட்சியினரின் அதிருப்தியை போக்க முடிந்திருக்குமே என்ற எண்ணமும், வருத்தமும் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது.
ஒரே இடத்தில் ரொம்ப நாட்களாக இருப்பதே இதற்கு காரணம் என்றும், அவை நம்புகின்றன.
குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தி.மு.க., மீதும், ஆட்சி மீதும் ஆழமான அதிருப்தி இருக்கிறது.
மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்துவதையே முழு நேர பணியாக கொண்டிருக்கும் அக்கட்சியால், நினைத்த நேரத்தில் குரல் கூட கொடுக்க முடியவில்லை. அனுமதி மறுப்பு நடவடிக்கையால், அக்கட்சியையும் காவல் துறை கட்டிப் போட்டு விடுகிறது.
மார்க்சிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கமும், அரசுக்கு எதிராக எதையுமே செய்ய முடியாத நிலையில் உள்ளது. சாம்சங் தொழிலாளர் பிரச்னை ஆகட்டும், அரசு திட்டங்களுக்காக விளை நிலங்கள் எடுக்கும் பிரச்னை ஆகட்டும், எதற்குமே போராட முடியாதபடி, ஆளும் தலைமை தடை போட்டு விடுகிறது.
மற்றொரு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்கும், இதே அதிருப்தி இருக்கிறது.
தங்கள் கட்சிக்குள் புகுந்து அரசியல் செய்யும் அளவுக்கு தி.மு.க., போய் விட்டதாகவும், தன்னை சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்க விடாமல் வைத்திருப்பதாகவும், திருமாவளவன் உள்ளுக்குள் புலம்புவதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், தி.மு.க., தலைமை மீது புழுக்கத்தில் இருக்கிறார்.
ம.தி.மு.க., பலவீனப்பட்டு நிற்பதை காரணம் காட்டி, தனக்கு ராஜ்யசபா, 'சீட்' வழங்க மறுத்ததை அவமானமாக கருதுகிறார். நல்ல வாய்ப்பு வராததால், தி.மு.க., கூட்டணியில் தொடருவதாக, ஒரு பேச்சுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தி.மு.க., அனுதாபியாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இருந்தாலும், அவரது டில்லி தலைவர்கள் அப்படி இல்லை. அதிக சீட் கொடுத்தால் மட்டுமே, தி.மு.க., கூட்டணியில் தொடர வேண்டும்.
இல்லையேல், விஜய் அமைக்கும் புதிய கூட்டணிக்கு செல்ல வேண்டும் என, வெளிப்படையாகவே பேசத் துவங்கி விட்டனர். அதையே மையக்கருவாக்கி, ராகுலுக்கும், கார்கேவுக்கும் கடிதம் எழுதிக் கொண்டுஇருக்கின்றனர்.
கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், அந்த கருத்தை சோனியா வரை எடுத்து சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் அதிருப்தியில் இருப்பதும், அலப்பரை செய்வதும், ஆளுங்கட்சிக்கு பெரிய நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. அதையெல்லாம் சமாளித்து, வேறு வழிகளில் சரிக்கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.
பிரசார திட்டம்
இதற்கிடையில், உள்துறை தந்த ரிப்போர்ட், அந்த நம்பிக்கையை தகர்த்து விட்டதாக தெரிகிறது. அதிக தொகுதிகள், ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, நடிகர் விஜய் பக்கம் சாய, கூட்டணி கட்சிகள் சில, நாள் பார்த்து வரும் தகவல், ஆளும் தலைமையை அதிர வைத்துள்ளது.
இதையடுத்து உருவானவதே, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார திட்டம். கூட்டணி பேரத்தையும், அணி மாறும் வாய்ப்பையும் முறியடிக்க, தனித்து களம் காணும் நோக்கில் தயாரானது தான் இந்த பிரசார இயக்கம் என்கிறது, அறிவாலய தரப்பு.
'முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள் என, தி.மு.க.,வைச் சேர்ந்த மொத்த பட்டாளமும் களமிறக்கப்பட்டு, வீடு வீடாக சென்று, மக்களை சந்தித்து வருகின்றனர் என்றால் சும்மாவா…
'அதில் தெரியவரும் தகவல்கள், கோரிக்கைகள் அடிப்படையில், அடுத்தடுத்து இலவசங்களை அறிவித்து செயல்படுத்தும் திட்டமும் எங்களிடம் இருக்கிறது. அதன்பிறகு பாருங்கள், தனித்து போட்டி என்ற அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்' என்கிறது ஆளும் தரப்பு.