தோனியின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

13 ஆடி 2025 ஞாயிறு 16:24 | பார்வைகள் : 533
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 387 ஓட்டங்களை குவித்து ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 316 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி களத்தில் உள்ளனர்.
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உட்பட 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம், ரிஷப் பண்ட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 2 சிக்ஸ் அடித்ததன் மூலம், இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 36 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். முன்னதாக, விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்திற்கு எதிராக 34 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
மேலும், 3 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 416 ஓட்டங்கள் எடுத்துள்ள அவர், இங்கிலாந்தில் ஒரு தொடரில் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும், இங்கிலாந்தில் ஒரு தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் நீண்ட கால சாதனையை முறியடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தோனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 349 ஓட்டங்கள் குவித்திருந்தார்.