கஷ்டத்தில் தி.மு.க., அரசு; அமைச்சர் நேரு வருத்தம்

14 ஆடி 2025 திங்கள் 10:10 | பார்வைகள் : 152
தி.மு.க., அரசுக்கு, இப்போது உள்ள கஷ்டம் போல், எந்த காலத்திலும் கஷ்டம் வந்ததில்லை,” என்று அமைச்சர் நேரு பேசினார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு ஆண்டு கால சாதனை விளக்கக் கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., முதன்மைச் செயலரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான நேரு பேசியதாவது:
இனிமேல் பா.ஜ.,வுடன் சேரவே மாட்டோம் என்ற அ.தி.மு.க.,வினர், மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளை முடித்துக் கொள்வதற்காக, கட்சியை அடகு வைத்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக ஒருவர் வந்துள்ளார். அவர் வரும் போதே, தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்கின்றனர்.
இப்போது உள்ள கஷ்டம் போல் எந்த காலத்திலும் தி.மு.க., அரசுக்கு கஷ்டம் வந்ததில்லை. ஒருபுறம், கடந்தகால அ.தி.மு.க.,வின் நிர்வாகம் சரி இல்லாததால், நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. மற்றொரு புறம் கொரோனா பாதிப்பை தடுக்க, இரண்டு ஆண்டுகள் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
மத்திய அரசும், தமிழகத்துக்கு தர வேண்டிய எந்த நிதியையும் வழங்காமல் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. 100 நாள் வேலைக்கும், புதிய பள்ளிகள் கட்டுவதற்கும், ஜல் ஜீவன் திட்டத்திற்கும் தர வேண்டிய, 3,500 கோடி ரூபாயை தராமல் நிறுத்தி விட்டனர். இந்த ஆண்டுக்கான 4,000 கோடி ரூபாயையும் தரவில்லை. மத்திய அரசிடம் இருந்து, ஒவ்வொரு முறையும் போராடி போராடித்தான் நிதியைப் பெற வேண்டிய நிலை இருக்கிறது.
கடுமையான நிதி நெருக்கடியிலும், மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக, தமிழக முதல்வர் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி காட்டி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.