Paristamil Navigation Paristamil advert login

15 ஆடி 2025 செவ்வாய் 11:55 | பார்வைகள் : 144


அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக செயல்படும் அன்புமணிக்கு போட்டியாக, அவரது தந்தை ராமதாசும் களமிறங்கி இருக்கிறார். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வை சேர்க்கும் விஷயத்தில், மகனை முந்திக் கொள்ளும் முடிவோடு, காய் நகர்த்தலை அவர் துவங்கி இருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த 2024 டிசம்பர் 28ல், புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், அப்பா --- மகன் இடையே ஏற்பட்ட பகிரங்க மோதல், ஆறு மாதங்களை கடந்தும் நீடிக்கிறது.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி, பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, 'நானே தலைவர்' என ராமதாஸ் அறிவித்தார். அதை ஏற்க மறுத்த அன்புமணி, 'பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நானே தலைவர்' எனக்கூறி, தன் ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார்.

முடியவில்லை


இருவரையும் சமாதானப்படுத்த, பா.ஜ.,வுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட பலர் முயன்றும் முடியவில்லை.

'தலைமை பதவிக்கு தகுதியில்லாதவர்; தாய் மீது தண்ணீர் பாட்டிலை வீசி தாக்க முயன்றார்; கூசாமல் பொய் பேசுபவர்' என, அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை ராமதாஸ் அடுக்கினார். அதோடு விடாமல், 'அன்புமணியின் பெயருக்கு பின்னால், தன் பெயரை பயன்படுத்தக் கூடாது' என்ற தடையை விதித்து, பா.ம.க.,வினரை அதிர வைத்துள்ளார் ராமதாஸ்.

ஐந்து பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர் அன்புமணி பக்கமும், இருவர் ராமதாஸ் பக்கமும் நிற்கின்றனர். இரு தரப்பினரும், சபாநாயகரிடம் தனித்தனி கடிதம் கொடுத்ததால், சட்டசபையில் பா.ம.க., இரண்டாக உடைந்துள்ளது.

மாநில நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், செயற்குழு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்; பொதுக்குழுவை கூட்டவும் ஏற்பாடு செய்து வருகிறார்.

அதை முறியடிக்க, வரும் 25ம் தேதி முதல், 100 நாட்களுக்கு அன்புமணி நடைபயணம் செல்ல இருக்கிறார். அத்துடன், பா.ஜ., கூட்டணியில் இணைய விரும்பும் அன்புமணி, அக்கட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறார்.

இதற்காக, சில நாட்கள் டில்லியில் முகாமிட்டிருந்தார். பா.ஜ., தலைவர்களின் கவனத்தை ஈர்க்க, 'பா.ம.க.,வில் நடக்கும் குழப்பங்களுக்கு, தி.மு.க.,வே காரணம்' என்று குற்றஞ்சாட்டிய அன்புமணி, தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இது தொடர்பாக, ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறியதாவது:

அன்புமணியிடம் பா.ம.க., சென்று விடக்கூடாது என்பதில் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். பா.ஜ., வாயிலாக, அ.தி.மு.க., கூட்டணியில் அவர் இணைந்து விட்டால், மத்திய அரசின் அதிகார பலம் வாயிலாக, அன்புமணியிடம் பா.ம.க., பெயர், கொடி, சின்னம் சென்று விடும் வாய்ப்பு இருப்பதாகவும் ராமதாஸ் நினைக்கிறார்.

நம்பிக்கை


எனவே, அன்புமணியின் திட்டத்தை முறியடிக்க, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருகிறார். 'அன்புமணியால் தி.மு.க., கூட்டணிக்கு செல்ல முடியாது; அவர்களும் ஏற்க மாட்டார்கள்.

எனவே, அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியில் தான் இணைந்து விட்டால், மகனை வழிக்கு கொண்டு வந்து விடலாம்' என ராமதாஸ் நினைக்கிறார்; அதற்கேற்ப காய் நகர்த்தல்களை துவங்கியுள்ளார். அதனால் தான், 'பிரதமர் மோடி என் நண்பர்' என, ராமதாஸ் அடிக்கடி கூறத் துவங்கியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆனாலும், 2024 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு கைகொடுத்த தன்னை, டில்லி மேலிடம் கைவிடாது என்ற நம்பிக்கையில் அன்புமணி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்