ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் : ஏன் தெரியுமா..?
27 தை 2022 வியாழன் 02:56 | பார்வைகள் : 8669
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கு, மன அழுத்தம், வெளியில் செல்ல முடியாமல் இருந்த சூழ்நிலை ஆகிய அனைத்துமே எல்லா வயதினரையும் வெகுவாக பாதித்துள்ளது. அதிகப்படியான வேலை காரணமாக மட்டுமன்றி, பலரும் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் உடல் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியம் மற்றும் உணர்வுகள் அதாவது எமோஷனல் well-being என்பதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தபடியே வேலை செய்பவர்களுக்கு அலுவலக வேலைகள் மட்டுமின்றி வீட்டு வேலைகள் அதிகரித்து உறக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அலுவலகபாணியில் பணியில் இருக்கும் பெண்களுக்கு தூக்கம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலை செய்யும் பெண்களுக்கு வழக்கத்தைவிட அதிக தூக்கம் தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தூக்க ஆரோக்கியத்தில் பாலின வேறுபாடுகள் என்ற தலைப்பின் கீழ் தேசிய மருத்துவ நூலகத்தில் 2014 ஆம் ஆண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது. ஆய்வின்படி ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தேவைப்படும் தூக்கத்தின் அளவு வேறுபடும். ஆண்களை விட பெண்கள் 40 சதவிகிதம் அதிகமாக தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை மற்றும் ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் ஆகிய இரண்டும் நோய்களாலும் பெண்கள் தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. அதேபோல வேறு சில ஆய்வுகளும ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகமாக தூக்கம் தேவைப்படும், தூக்கமின்மையால் பெண்களுக்குத் தன அதிகமான பாதிப்புகள் ஏற்படும் என்றும் உறுதி செய்துள்ளன.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே காணக்கூடிய உடலியல் ரீதியான வேறுபாடுகள் இருவருக்குமான தூக்கத்தின் வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆணும் பெண்ணும் தங்களுடைய நாளை எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பது மிகப் பெரிய காரணியாக உள்ளது. பெண்கள் மற்றும் ஆண்கள் வெவ்வேறு வேலைகளில் வெவ்வேறு விதமாக தங்கள் நாளை கழிக்கிறார்கள். மேலும், ஆண்களை விட பெண்கள் தான் குடும்பத்தினரையும் கவனித்து, வீட்டு வேலைகளிலும் அதிகமாக நேரம் செலவழிக்கிறார்கள்.
எனவே இந்த அடிப்படையில் பெண்களுக்கு ஆண்களை விட அதிகமான தூக்கம் தேவைப்படும் ஆய்வு தெரிவித்துள்ளது. அதே போல, வீடு மற்றும் குடும்பத்தினரைப் பராமரித்து வரும் பெண்கள் நள்ளிரவில் திடீரென்று தூக்கம் கலைந்து எழுவது அதிகம். இதனால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவதும் பெண்களுக்குத்தான் அதிகம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சராசரியாக ஆண்களைவிட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும். அதிகம் தூங்க வேண்டும் என்பது நேரம் மட்டுமல்ல, ஆழமான தூக்கம் மற்றும் தொந்தரவில்லாத தூக்கம் ஆகியவற்றையும் குறிக்கிறது எனவே நீண்ட நேரம் என்பதைவட எவ்வளவு நன்றாக தூங்குகிறார்கள் என்பதும் முக்கியம்.
சரியாக தூக்கம் சுழற்சி அல்லது சரியாக தூங்காத பெண்களுக்கு ஹைபர்டென்ஷன், டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், தீவிர மன அழுத்தம் மற்றும் மன ஆரோக்கியம் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. அதுமட்டுமின்றி, இவ்வாறு தூக்கமின்மை பாதிப்பால் தான் ஒரு சில வேளைகளில் ஆண்களைப் போல பெண்களால் அதிகமாக கவனம் செலுத்த முடிவதில்லை.
பெண்களுக்கு எவ்வளவு தூக்கம் அதிகமாக தேவைப்படும் ?
வாழ்க்கைமுறை, செய்யும் வேலை, பொறுப்பு, உணவுப் பழக்கம் என்று ஒவ்வொருவருக்கும் தூக்கத்தின் அளவு மாறுபடும். ஆனால் சராசரியாக ஆண்களை விட பெண்கள் குறைந்தது அரை மணி நேரமாவது அதிகமாக தூங்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.