வீடு தேடி வரும் சேவைகள் முகாம்.. சிதம்பரத்தில் முதல்வர் துவக்கிவைப்பு!

16 ஆடி 2025 புதன் 09:23 | பார்வைகள் : 155
அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சிதம்பரத்தில் நேற்று துவக்கி வைத்தார். பின், முகாமில் பங்கேற்ற மக்களிடம் விண்ணப்பங்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.
உங்களுடன் ஸ்டாலின்' என்ற இத்திட்டத்தின் கீழ், நேற்று முதல் நவம்பர் மாதம் வரை மாநிலம் முழுதும், 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக, 3,563 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில், 1,428 முகாம்கள் நகர்ப்புறங்களிலும், 2,135 முகாம்கள் ஊரகப்பகுதிகளிலும் நடைபெறும்.
குறைகளுக்கு தீர்வு
இந்த முகாம்கள் நடைபெறும் பகுதிகளில் திட்டம் குறித்த விழிப்புணர்வு பணிகள், விண்ணப்பம் மற்றும் அரசு வழங்கும் சேவைகளை பெற தேவையான தகுதிகள், ஆவணங்கள் விபரங்கள் அடங்கிய தகவல் கையேட்டினை வழங்கும் பணியை, தன்னார்வலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விபரங்களுடன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்ற விபரமும் தன்னார்வலரால் தெரிவிக்கப்படுகிறது.
முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன. நகர்ப்புற பகுதிகளில், 13 அரசுத் துறைகளின், 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில், 15 அரசுத் துறைகளின், 46 சேவைகளும் வழங்கப்படும்.
இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடி தீர்வு காணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திட்டத்தை துவக்கி வைத்த பின், சிதம்பரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இளையபெருமாள் நுாற்றாண்டு நினைவரங்கத்தை திறந்து வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அப்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்த முதல்வர், 'இத்திட்டத்தால் தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் பயன்பெறுவர்' என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசியதாவது:
கடந்த, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' முன்னெடுப்பு மூலம் பொதுமக்களிடம் இருந்து பெற்ற மனுக்கள் மீது, 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தேன்.
முதல்வராக பொறுப்பேற்றதும், அதற்காக தனித்துறை உருவாக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
இதனால், தி.மு.க., அரசு மீது நம்பிக்கை வைத்து மேலும் பல மனுக்கள் வந்தன. அதற்காக, 'முதல்வரின் முகவரி' என்ற தனித்துறையை உருவாக்கினோம். 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலம் தமிழகம் முழுதும், 5,000 முகாம்கள் நடத்தி பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம்.
தற்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள், தங்கள் பகுதியில் நடக்கும் முகாமில் விண்ணப்பம் கொடுத்தால் போதும். நிச்சயமாக உரிமைத்தொகை கிடைக்கும்.
மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அரசின் சேவைகளையும், திட்டங்களையும் வழங்குவதே இதன் நோக்கம். அரசு அலுவலர்கள் உங்களைத் தேடி வரப் போகின்றனர். மக்களின் தேவைகளை அறிந்து தீர்த்து வைப்பது தான் திராவிட மாடல் அரசு.
ஒற்றுமையாக உள்ளோம்
எதிர்காலத்திற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நேரத்தில், நிகழ்காலத்தில் நெஞ்சை நிமிர்த்தி நடைபோட, தமிழ் சமுதாயத்தின் விடியலுக்கும், உயர்வுக்கும் கடந்த காலத்தில் உழைத்த மாமனிதர்களை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.
ஈ.வெ.ரா., வழியில் திராவிட இயக்க தலைவர்கள், மார்க்சிய சிந்தனை கொண்டுள்ள பொதுவுடைமை இயக்க தலைவர்கள், காந்திய வழி வந்த தேசிய இயக்கத் தலைவர்கள், அம்பேத்கர் இயக்கத் தலைவர்கள் என, எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம். அதுதான் ஓரணியில் தமிழ்நாடு. இவ்வாறு இருக்கும்போது, எந்த டில்லி அணியின் காவித்திட்டமும் இங்கே பலிக்காது.
மகளிர் வேலைவாய்ப்பு
தமிழக வரலாற்றிலேயே தி.மு.க., அரசில் தான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அதிக திட்டங்களை தந்திருக்கிறோம். தி.மு.க., அரசு தான் உண்மையான சமூக நீதி அரசு.
கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி மகளிருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில், கொடுக்கன்பாளையத்தில், 150 ஏக்கரில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணி உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 75 கோடி ரூபாயில், இது அமைக்கப்பட உள்ளது. அதில், 18,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் புதிதாக இணையதளம் துவக்கம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் நேற்று துவக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் முகாம்களில் பங்கேற்றனர்.
இத்திட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். வீடுதோறும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்கும், முகாம்களை ஏற்பாடு செய்வதற்கும், ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், விண்ணப்பிக்கும் நபர்களை ஏதாவது ஒரு திட்ட பயனாளியாக சேர்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையறிந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்க துவங்கியுள்ளனர்.
திட்டத்தை பற்றி பொதுமக்கள் அறியவும், முகாம் நடக்கும் இடங்களை தெரிந்து கொள்ளவும், வழங்கப்படும் சேவைகள் குறித்த விபரம் அறியவும், www.ungaludanstalin.tn.gov.in என்ற இணையதள சேவையும், தமிழக அரசால் துவக்கப்பட்டு உள்ளது.