ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் சூழ்நிலையை கவனமாக கருத்தில் கொள்ளுங்கள்; இந்திய தூதரகம் எச்சரிக்கை

16 ஆடி 2025 புதன் 08:23 | பார்வைகள் : 173
ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஈரானில் இருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: ஈரானுக்கு இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அங்குள்ள சூழ்நிலைகளை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் வெளியேற ஆர்வம் உள்ளவர்கள் வணிக விமானங்கள் மற்றும் படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தி வெளியேறலாம்.
சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து ராணுவ மோதல்கள் நிலவி வருவதால், பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.