விஜயை அரசியலில் இறக்கியதே பா.ஜ.,தான்: சொல்கிறார் சபாநாயகர் அப்பாவு

16 ஆடி 2025 புதன் 10:23 | பார்வைகள் : 199
சிறுபான்மையினர் ஓட்டுக்களை பிரிக்க நடிகர் விஜயை அரசியலில் இறக்கியதே பா.ஜ.,தான் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் 'உங்களுடன் ஸ்டாலின் 'திட்டத்தில் மனுக்கள் பெறுவதை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார்.
நிகழ்வில் கலெக்டர் சுகுமார் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது:
மஹாராஷ்டிர கவர்னர் ராதாகிருஷ்ணன்போல் ஒரு கவர்னர் இருந்தால் எந்த பிரச்னையும் வராது. தமிழக கவர்னர் தற்போது தமிழக சுகாதாரத்துறையை பாராட்டி உண்மையை சொல்லியுள்ளார்.
இதனை கண்டுபிடிக்க அவருக்கு இவ்வளவு நாள் ஆகிவிட்டது. தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுவதால் தான் பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே தெரியாமல் ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசினார். யார் வசனம் எழுதி கொடுத்து இவர் வாசிக்கிறார் என்பது புரியவில்லை.
நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை சரியா, தவறா என்பது இதுவரை தெரியவில்லை.
அச்சோதனை செய்த அதிகாரி அருண்ராஜ், அதை டில்லி சென்று சரிசெய்த ஆனந்திற்கு அவரது கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பின்னால் விஜய் இருப்பதாக பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்று வருகிறது. விஜயின் தாயார் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மை ஓட்டுகளை பிரிக்க விஜயை அரசியல் களத்தில் பா.ஜ., இறக்கி உள்ளதாக தோன்றுகிறது என்றார்.