பாகிஸ்தானை புரட்டிப்போட்ட வெள்ளம்..! 116 பேர் உயிரிழப்பு....

16 ஆடி 2025 புதன் 07:20 | பார்வைகள் : 262
பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருவதால் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 80 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்தது.
இந்த நிலையில் வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 253 பேர் காயமடைந்துள்ளதாகவும், 262 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பருவமழையின் தீவிரத்தால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் 15 முதல் 17ஆம் திகதி வரை நாட்டின் பெரும்பகுதிகளில் மேலும் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் காற்றுவீசும் என்று கணித்துள்ளது.
இதனால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நகர்ப்புற வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பஞ்சாப், இஸ்லாமாபாத், கைபர்-பக்துன்க்வா மற்றும் ஆசாத் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.