சொல்லவே இல்லையே? தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித் ஷா...

17 ஆடி 2025 வியாழன் 06:42 | பார்வைகள் : 156
தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்துள்ள நிலையில், அக்கட்சிகளுக்குள் கூட்டணி ஆட்சி தொடர்பான முரண்பட்ட கருத்துகள் தொடர்ச்சியாக தலைவர்களால் பகிரப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, 'வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும்; அதில், பா.ஜ., கட்டாயம் அங்கம் வகிக்கும்' என தொடர்ச்சியாக கூறிக் கொண்டிருக்கிறார்.
மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனையை மையமாக வைத்து, அவர் தொடர்ச்சியாக பல்வேறு பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்து வருகிறார். அப்படி பேட்டி அளிக்கும் போது, தமிழகம் குறித்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.
பெரும் குழப்பம்
அதிலும், 'வரும் 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணி ஆட்சி ஏற்படும்; அக்கூட்டணி அமைச்சரவையில் பா.ஜ., அங்கம் வகிக்கும்' என திட்டவட்டமாக கூறி வருகிறார்.
ஆனால், அ.தி.மு.க., தரப்பில் அதை மறுத்து வருகின்றனர். 'வரும் சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்; அ.தி.மு.க.,வே தனித்து ஆட்சி அமைக்கும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
இது, இரு கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த விஷயத்தில், தங்கள் தரப்பாக என்ன சொல்வது என புரியாமல், இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என 'பஸ் யாத்ரா' சுற்றுப்பயணத்தை துவங்கி, தமிழக மக்களை சந்தித்து வரும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'அ.தி.மு.க., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான் தான்' என அழுத்தம் திருத்தமாக கூறி வந்தார். ஆனால், கூட்டணி ஆட்சி குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.
கலந்துரையாடல்
இந்நிலையில், சிதம்பரம் தனியார் ஹோட்டலில் புவனகிரி, காட்டுமன்னார்கோவில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கலந்துரையாடினார்.
பின், அவர் அளித்த பேட்டியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.,வினர் கருத்துகளுக்கு விளக்கம் சொல்வது போல, அதிரடியாக கருத்து கூறியுள்ளார்.
'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என ஒருபோதும் அமித் ஷா சொல்லவில்லை; தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தான் சொன்னார்' என விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தன் பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வருவாய் துறை அதிகாரிகள் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்தித்து, பிரச்னைகளை தீர்த்து வைத்தனர். தற்போது அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி, 40 துறைகளை வைத்து, 'உங்களுடன் ஸ்டாலின்' என விளம்பரப்படுத்துகின்றனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் மக்களை ஏமாற்ற, விளம்பரம் மாடல் அரசு நாடகத்தை துவங்கியுள்ளது. அரசு இயந்திரத்தை, தற்போதைய தமிழக அரசு தவறாக பயன்படுத்துகிறது. அரசு அதிகாரிகள், அரசியல்வாதியாக மாறக்கூடாது.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை மக்கள் தான் எஜமானர்கள்; அவர்களுக்கான பிரச்னையைத் தான் நாங்கள் பேசுவோம்.
தி.மு.க., 1999ம் ஆண்டு எம்.பி., தேர்தலிலும், 2001 எம்.எல்.ஏ., தேர்தலிலும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருந்தது. அப்போதெல்லாம் எதுவும் பேசாத ஸ்டாலின், தற்போது அ.தி.மு.க., கூட்டணியை விமர்சனம் செய்கிறார்.
நான் தான் முதல்வர்
பழனிசாமி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார் என நினைத்திருந்தார். நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த பின்னர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.
எங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித் ஷா சொல்கிறார். அதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த கட்சிக்கு நான் தான் தலைமை.
நாங்கள் இருவரும் அமர்ந்து பேசி தெளிவு செய்த விஷயம் இது. அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்; அதில் பழனி சாமி தான் முதல்வர். இதற்கு மேலுமா உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும்.
அ.தி.மு.க., கூட்டணி தனி பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
அ.தி.மு.க., கூட்டணிக்கு பா.ம.க., வந்தால், அவர்கள் சொல்லும் கூட்டணி ஆட்சி குறித்தெல்லாம் பேசலாம்; கருத்து கூறலாம். பந்தியிலேயே உட்காராமல் இலை போட முடியாது. இவ்வாறு பழனிசாமி பேட்டி அளித்தார்.
ஆட்சியில் பங்கு பா.ம.க.,வின் உரிமை
பா.ம.க., 37வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. சமூக நீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில், பா.ம.க.,வுக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழகத்தில் இல்லை. தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை களையும் அரணாக பா.ம.க., இருந்து வருகிறது. தமிழ் மொழி, இனம், தமிழக மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், பா.ம.க., வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழகம், இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால், அதற்கு, தமிழகத்தை ஆளும் அரசில், பா.ம.க.,வும் பங்கேற்க வேண்டும்.அது நம் உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட, பா.ம.க., தோற்றுவிக்கப்பட்ட இந்நாளில், கட்சியினர் அனைவரும் உறுதியேற்போம்.
-அன்புமணி, தலைவர், பா.ம.க.,