கச்சத்தீவை மீட்க நடவடிக்கை இல்லை: மத்திய அரசு மீது ஸ்டாலின் காட்டம்

17 ஆடி 2025 வியாழன் 07:42 | பார்வைகள் : 156
கச்சத்தீவு பிரச்னையில் பிரதமர் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:
மீனவ மக்களின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசால் எடுக்கப்படுகிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு, நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறேன். கடந்த ஏப்., 2ம் தேதி சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் சிறிதும் அக்கறையில்லாத மத்திய பா.ஜ., அரசு கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என்று அரசியல் மட்டும் தான் செய்கிறது.
மற்றொரு நாட்டுடன் ஒப்பந்தம் போடுவது, மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேல் பா.ஜ.,தான் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதுவரை கச்சத்தீவை மீட்க, மத்திய பா.ஜ., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை தடுக்கவோ, படகுகளை மீட்கவோ முயற்சி எடுக்கவில்லை.
'கச்சத்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்' என, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பேசி இருக்கிறார். அதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இதுவரை எந்த பதிலும் தரவில்லை. பிரதமர் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக தமிழக அரசும், தி.மு.க.,வும் தொடர்ந்து போராடும்.
தமிழக எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு, 2019ம் ஆண்டிலிருந்து தமிழக மக்கள் தொடர்ச்சியாக 'டாட்டா பை பை' சொல்லிக்கொண்டு உள்ளனர். வரும் சட்டசபைத் தேதலிலும் பை பைதான் அவருக்கு பரிசாகக் கிடைக்கும். இனி ஒருபோதும், பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள். ஏன், அவருடைய கட்சிக்காரர்களே அவரை நம்பத் தயாரில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
சுந்தரா டிராவல்சில் காமெடி
ஒரு திரைப்பட காமெடியில் வருவதுபோன்று, 'அதற்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டப்பா, அது போல மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். இதை தெரிந்து கொண்டு போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்க சுந்தரா டிராவல்ஸ் மாதிரி ஒரு பஸ்சை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் பழனிசாமி. அந்த பஸ்சிலிருந்து புகை வருவது மாதிரி, இப்போது அவருடைய வாயிலிருந்து பொய்யும், அவதூறுமாக வந்து கொண்டே இருக்கிறது.
- ஸ்டாலின், தமிழக முதல்வர்