நட்பு நாடுகள் உதவியுடன் நிமிஷா பிரியாவை மீட்க முயற்சி: வெளியுறவு அமைச்சகம்

18 ஆடி 2025 வெள்ளி 06:42 | பார்வைகள் : 148
ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள நிமிஷா பிரியாவை காப்பாற்ற நட்பு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், '' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா,36. ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கிளினிக்கில் பணியாற்றினார். அப்போது நிமிஷா பிரியாவுக்கு தலால் தொல்லை கொடுத்துள்ளார். 2017 ல் தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்து பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா இறங்கினார். அதில், மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் தலால் உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இது மிகவும் முக்கியமான விஷயம். வழக்கிற்கு தேவையான உதவிகள இந்திய அரசு அளித்து வருகிறது. சட்ட ரீதியிலான உதவியையும், குடும்பத்துக்கு உதவ வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நிமிஷா பிரியாவுக்கு தூதரக உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து குடும்பத்துடனும், உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்கிறோம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பரஸ்பர ஒப்பந்தம் ஏற்படுத்த நிமிஷா குடும்பத்துக்கு கூடுதல் நேரம் ஏற்பாடு செய்து கொடுத்தோம். இதனால், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை உள்ளூர் அதிகாரிகள் தள்ளி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நட்பு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.