மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு

19 ஆடி 2025 சனி 11:58 | பார்வைகள் : 134
மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு தடையாகவும், மக்களுக்கு எதிரானதாகவும் உள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் துர்காப்பூரில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த திட்டங்களை துவக்கி வைத்தும் பிரதமர் மோடி பேசியதாவது: எக்கு நகரமான துர்காப்பூர், இந்தியாவின் மனித வளத்துக்கும் மையமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு துர்காப்பூர் முக்கிய பங்காற்றியது. இந்த வளர்ச்சி திட்டங்கள் இந்த நகரின் அடையாளத்தை பலப்படுத்துவதுடன் இணைப்பையும் அதிகரிக்கும்.
மேற்கு வங்கத்தின் ரயில் இணைப்பை மேம்படுத்த ஏராளமான பணிகள் நடந்து வருகின்றன. வந்தே பாரத் ரயில்கள் அதிகம் ஓடும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. கோல்கட்டா மெட்ரோ விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு உள்ளன. இன்று இரண்டு ரயில்வே பாலங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. துர்காப்பூர் மற்றும் ரகுநாதபூரில் உள்ள தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதற்காக ரூ.1,500 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் பணியாற்றி வருகிறோம்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானம் உலகளவில் பேசப்படும் விஷயமாக உள்ளது. நாட்டில் ஏற்படும் மாற்றங்களுக்கு இதுவே பெரிய அடிப்படையாக உள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, இந்த மாற்றங்களுக்கு பெரிய அம்சம் ஆகும்.
தொழில் வளர்ச்சியடைந்த மாநிலமாக மேற்கு வங்கத்தை மாற்றுவோம். மாநிலத்தின் தலையெழுத்தை மாற்றும் திறன் பா.ஜ.,வுக்கு உண்டு. தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக மாற்றுவோம். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் தடையாக உள்ளது.
திரிணமுல் வீழ்ச்சி அடையும் போதுதான் மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்லும். மக்களுக்கு எதிரானதாக திரிணமுல் காங்கிரஸ் அரசு உள்ளது. மத்திய பா.ஜ., அரசு மாநிலங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது. உண்மையாக மற்றும் கடினமாக உழைக்கும் அரசை உருவாக்க உறுதி ஏற்போம்.
மாநிலத்துக்கு புதிய முதலீடுகள் தேவைப்படுகிறது. வன்முறை நடக்கும் மாநிலத்தில் முதலீடு செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். திரிணமுல் காங்கிரசை அகற்றி மாநிலத்தை காப்பாற்றுங்கள்.
ஒரு காலத்தில் நாட்டின் வளர்ச்சியின் மையமாக மேற்கு வங்கம் இருந்தது. ஆனால், இன்று சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. இளைஞர்கள் வேறு வழியில்லாமல் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்கின்றனர். புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் முயற்சிகளுக்கு பதிலாக, பழையவையும் மூடப்படுகின்றன.
முதலீட்டுக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் எதிராக திரிணமுல் உள்ளது. முர்ஷிதாபாத்தில் கலவரம் ஏற்பட்டதும், போலீசார் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தனர். சாமானிய மக்களை திரிணமுல் காங்கிரசால் காப்பாற்ற முடியவில்லை. தொழிலதிபர்களிடம் இருந்து திரிணமுல் காங்கிரஸ் குண்டர்கள் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இதனால், முதலீடு இங்கு வருவது கிடையாது.
ஊழல் மற்றும் குற்றச்செயல்கள் மூலம், மாநிலத்தின் கல்வித்துறை மீது திரிணமுல் தாக்குதல் நடத்துகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அக்கட்சியினரால் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இது அமைப்பு ரீதியான முறைகேடு என நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் இந்த மோசமான நிலைமை பா.ஜ., ஆட்சி அமைந்ததும் மாற்றப்படும். மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்கள் வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது. குற்றவாளிகளை அக்கட்சி பாதுகாத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.