Paristamil Navigation Paristamil advert login

ஆட்சி முடியும் நேரத்தில் பக்தர்கள் மீது என்ன திடீர் பாசம்; நயினார் நாகேந்திரன்

ஆட்சி முடியும் நேரத்தில் பக்தர்கள் மீது என்ன திடீர் பாசம்; நயினார் நாகேந்திரன்

19 ஆடி 2025 சனி 13:25 | பார்வைகள் : 104


ஆட்சி முடியும் தருவாயில் பக்தர்கள் மீது இந்து அறநிலையத்துறைக்கு அப்படி என்ன திடீர் பாசம்' என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரூ.50லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப் போவதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பணம் படைத்தவர்களும் அதிகார பலம் கொண்டவர்களும் எவ்வித தடையுமின்றி எளிதாக இறைவனை சென்று தரிசிக்கையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மட்டும் எதற்காக நிதிச்சுமை ஏற்றப்படுகிறது?

அதுவும் கடந்த நான்கு ஆண்டுகளாக கோவில்களில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல், கூட்ட நெரிசலாலும் கோவில் நிர்வாகக் குளறுபடிகளாலும் பக்தர்கள் அவதிப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்து அறநிலையத்துறைக்கு, ஆட்சி முடியும் தருவாயில் பக்தர்கள் மீது என்ன திடீர் பாசம்?

ஒருவேளை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் திராணியின்றி, கட்டண உயர்வு மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முயற்சிக்கிறதா இந்த அரசு?

கோடி கோடியாக கொள்ளையடிக்கும் தி.மு.க.,வினருக்கு வேண்டுமானால் ரூ.50 உயர்வு என்பது அசட்டையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் நான்கு பேர் கொண்ட ஒரு ஏழைக் குடும்பத்திற்கு தரிசனக் கட்டணம் ரூ. 400 என்பது அவர்களின் ஒரு நாள் ஊதியம்.

எனவே, ஏழை மக்களை வஞ்சிக்கும் இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இல்லையேல் அந்த அண்ணாமலையார் சாட்சியாக தமிழக பா.ஜ., சார்பாக மிகப்பெரும் அறப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்