வேர்க்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..?
7 கார்த்திகை 2022 திங்கள் 04:11 | பார்வைகள் : 4595
வேர்க்கடலை நட்ஸ் குடும்பத்தை சேர்ந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் பட்டாணி, பீன்ஸ் போன்றே பருப்பு குடும்பத்தை சேர்ந்தது. மிகவும் பிரபலமான ஸ்னாக்ஸாக இருக்கும் வேர்க்கடலை ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக உள்ளது மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. மலிவு விலையில் கிடைக்கும் வேர்க்கடலையில் புரோட்டின், கார்போஹைட்ரேட், மைக்ரோ மற்றும் மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட பல நிறைந்துள்ளன. பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள வேர்க்கடலை வழங்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரே நேரத்தில் பல ஊட்டசத்துக்கள்: வேர்க்கடலையானது மினரல்ஸ், வைட்டமின்கள், புரதம், ஒமேகா -3, ஒமேகா -6, நார்ச்சத்து, தாமிரம், ஃபோலேட், வைட்டமின் ஈ, தயாமின், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாக இருக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது : வேர்க்கடலையில் நிறைந்திருக்கும் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. தவிர வேர்க்கடலையில் அடங்கி இருக்கும் ஒலிக் ஆசிட் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது: வேர்க்கடலையில் உள்ள டிரிப்டோபான் எனப்படும் அமினோ ஆசிட் செரோடோனின் என்ற பிரெயின் கெமிக்கலை வெளியிட உதவுகிறது. இது மனநிலையை ஒழுங்குபடுத்தி மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிக்க உதவுகிறது.
மூளைக்கு நல்லது: இதிலிருக்கும் வைட்டமின் பி 3 அல்லது நியாசின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
சரும ஆரோக்கியம்: வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் ஆசிட்கள் மற்றும் வைட்டமின்கள் நம் சருமத்திற்கு பல நன்மைகள் செய்கின்றன. இதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ சருமத்தில் வயதாகும் அறிகுறிகளை தாமதப்படுத்த உதவுகிறது. வேர்க்கடலையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல் சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.
எலும்பு வலிமைக்கு உதவும்: வேர்க்கடலையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
குழந்தைகளின் புரத தேவை: தினசரி வேர்க்கடலை குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸாக கொடுப்பது அவர்களின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு தேவையான புரத தேவையை பூர்த்தி செய்யும்.
எடை குறைப்பிற்கு உதவும்: வேர்க்கடலையில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் புரதத்தின் கலவை நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைத்திருக்க உதவுகிறது. வேர்க்கடலை நுகர்வின் மூல தேவையற்ற பசியை கட்டுப்படுத்தி எடை இழப்பு முயற்சியை துரிதப்படுத்தலாம். மேலும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க வேர்க்கடலை சிறப்பாக உதவும்.
ரத்தச் சர்க்கரை அளவு: நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் மிதமான அளவு வேர்க்கடலை சேர்க்கலாம். ஏனெனில் இவற்றின் குறைந்த கிளைசெமிக் குறியீடு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.