மன அழுத்தம் அதிகமானால் தொப்பையும் அதிகரிக்குமா..?
27 புரட்டாசி 2022 செவ்வாய் 11:38 | பார்வைகள் : 3113
நம்முடைய அழகான தோற்றத்திற்கு தொப்பை ஒரு தடையாக அமைகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதை யாரும் விரும்பி வரவைத்துக் கொள்வதில்லை. ஆனால், பல்வேறு வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக தொப்பை வந்து விடுகிறது. குறிப்பாக, மோசமான உணவுப் பழக்கம், உடல் இயக்கமின்மை, உடலில் அதிகப்படியாக கொழுப்பு சேருவது போன்ற பல காரணங்களால் தொப்பை ஏற்படுகிறது. இதெல்லாம் நாம் கேள்விப்பட்ட விஷயம் தான் என்றாலும், மன அழுத்தம் காரணமாகவும் தொப்பை அதிகரிக்கும் என்ற தகவல் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிப்பதாக உள்ளது.
பொதுவாக நமக்கு மன அழுத்தம் ஏற்படுகின்றபோது உடலில் கார்டிஸால் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதுடன், உடல் எடை அதிகரிக்கவும், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரவும் காரணமாக அமைகிறது.
தொடர்ந்து மன அழுத்தம் இருப்பவர்களுக்கு இந்த கார்டிஸால் காரணமாக பல வகையான நோய்களும், உடல் மாற்றங்களும் ஏற்படுகின்றன. நமது சிறுநீரகங்களை ஒட்டியுள்ள சுரப்பிகளில் இருந்து இது சுரக்கிறது. இனி இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
இங்க் ஃபார்முலா : இது ஒன்றும் பெரிய மந்திரம் இல்லை. நமது உடலில் மன அழுத்தம் நீடித்தால் தானே அந்த கார்டிஸால் ஹார்மோன் உற்பத்தி ஆகும்? அப்படியானால், அந்த ஹார்மோன் சுரப்பை தடுக்க என்ன வழி? ஒருசில நிமிடங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாகுவது தான் இதற்கு தீர்வாகும்.
மூச்சுப்பயிற்சி: மூச்சுப்பயிற்சி பல வகைகளிலும் நன்மை அளிக்கக் கூடியது. குறிப்பாக நமது நுரையீரல் மற்றும் இதய நலன் காக்க உதவுகிறது. அத்துடன் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும் என்பது பலரும் அறியாத தகவல் ஆகும். மூச்சுப்பயிற்சி செய்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
உடற்பயிற்சி: உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், பல வகை நோய்களை தடுக்கவும் தினசரி உடற்பயிற்சி செய்வது கட்டாயமாகும். நாளொன்றுக்கு 45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரையில் உடற்பயிற்சி செய்யலாம். நடைபயிற்சி, ஜாக்கிங் போன்ற எளிய பயிற்சிகளை செய்தால் கூட போதுமானது.
புத்தக வாசிப்பு: இன்றைய டிவி, ஸ்மார்ட்ஃபோன் போன்றவற்றின் வருகைக்கு முன்பாக, பொழுதுபோக்கு அம்சமாகவும், மக்களின் அறிவுத் தேடலுக்கு தீனி போடுவதாகவும் அமைந்தது புத்தகங்கள் தான். இதை வாசிக்கும்போது நம் மனம் நம்மை அறியாமல் அமைதி அடைய தொடங்கும்.
சிரிப்பு: வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். நமது மன இறுக்கத்தை போக்குவதற்கான எளிய வழி மற்றும் விரைவான வழி இதுதான். நண்பர்களுடன் அரட்டை அடிப்பதன் மூலமாகவும் சிரிப்பு பயிற்சி மேற்கொள்ளலாம்.
சத்தான உணவு : அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கிய சமச்சீரான உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக, கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளும் அதே சமயத்தில், துரித உணவுகள், பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நன்றாக தூங்குவது: இரவில் நன்றாக தூங்கவில்லை என்றாலும் கார்டிஸால் ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாகிவிடும். ஆகவே, நாளொன்றுக்கு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரையில் அமைதியாக தூங்க வேண்டும். தூங்கும் முன்பாக மொபைல், டேப்லட், லேப்டாப் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.
மூலிகைகள் : சில வகை மூலிகைகளை எடுத்துக் கொள்வதாலும் நம் உடலில் கார்டிஸால் ஹார்மோன் சுரப்பு குறையும். மேலும், உடல் எடையும் குறையும். உதாரணத்திற்கு ஏலக்காய், எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றை இந்த ஹார்மோன் உற்பத்தியை கட்டுப்படுத்தும்.