நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் ...
21 புரட்டாசி 2022 புதன் 10:57 | பார்வைகள் : 4544
தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்ள நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் சிறிது தூரம் நடக்கும் பழக்கத்தை பின்பற்றுவது உடல் நலத்திற்கு அவசியமானது. நடப்பதால் கிடைக்கும் நன்மைகளை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சமீபத்திய ஆய்வு முடிவின்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடப்பது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். முதுமையை தள்ளிப்போடும். திடீர் இறப்பு அபாயத்தை தடுக்கும் என்பது தெரியவந்துள்ளது.
40 முதல் 79 வயதுக்குட்பட்ட 78 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் புற்றுநோய், டிமென்ஷியா உள்ளிட்ட எந்தவொரு நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள். அவர்கள் அனைவரும் தினமும் 10 ஆயிரம் அடி தூரம் நடக்க வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வேகமாக நடப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் போர்ஜா டெல் போசோ க்ரூஸ், ''ஒரு நாளைக்கு 3,800 அடிகள் நடப்பது கூட டிமென்ஷியா அபாயத்தை 25 சதவிகிதம் குறைக்க உதவும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்றார். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடப்பதன் மூலம் 8 முதல் 11 சதவீதம் வரை அகால மரணம் அடையும் அபாயத்தை குறைக்கலாம் என்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.