காளான் சாப்பிடுவதில் இத்தனை பக்கவிளைவுகள் இருக்கா..?
5 புரட்டாசி 2022 திங்கள் 08:40 | பார்வைகள் : 4082
சைவ உணவு உண்பவர்களின் முதன்மையான உணவுத் தேர்வுகளில் காளானுக்கு மிக முக்கிய இடம் உண்டு. காளான் ஃபிரைடு ரைஸ், காளான் பிரியாணி, காளான் மஞ்சூரியன், காளான் 65 என்று இறைச்சியை மையப்படுத்தி அசைவப் பிரியர்கள் என்னவெல்லாம் சாப்பிடுகிறார்களோ, அதே வெரைட்டிகளை சைவர்களும் ருசிப்பதற்கு உதவிகரமாக இருப்பது காளான் ஆகும்.
ரெஸ்டாரண்ட் செல்லும் சமயங்களில் காளான் ஒரு சிறந்த ஸ்டார்டர் உணவுத் தேர்வாக இருக்கிறது. வீடுகளிலேயே காளான் கிரேவி செய்து, பல உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாக நாம் பயன்படுத்துகிறோம். காளான் என்பது பூஞ்சை வகையைச் சார்ந்த உணவுப் பொருளாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிர்ம்பியுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது மட்டுமல்லாமல் காளான் மிகுந்த சுவை கொண்டது என்பதால் அதை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள தவறுவதில்லை.
உடல் ஆரோக்கியத்திற்கும் காளான் உதவிகரமாக இருக்கிறது. மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பவர்கள், கல்லீரல் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு காளான் நல்ல பலன் மிகுந்த உணவாகும். ஆண்டி பாக்டீரியா தன்மை கொண்ட காளான் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. காளான் சாதாரணமாக சமதள பகுதிகளில் வளரக் கூடியது ஆகும். வாரத்தில் இருமுறையாவது காளான் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அதே சமயம், காளான் சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது என்ற தகவல் பலருக்கு தெரிவதில்லை.
வயிற்றுப் பிரச்சனைகளை உண்டாக்கும் : காளான் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும். எல்லோருடைய உடலும் இதை ஏற்றுக் கொள்ளாது.
சரும அலர்ஜி ஏற்படும் : காளான் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் மிக முக்கியமானது சரும அலர்ஜி ஆகும். சிலருக்கு காளான் சாப்பிட்டால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே, மிகுதியாக இல்லாமல் மிதமான அளவில் காளான் சாப்பிடவும்.
போதை தரும் : அபின், கஞ்சா போன்று போதை தரக் கூடிய காளான் வகைகளும் உண்டு. அவை தடை செய்யப்பட்டிருக்கின்றன. நாம் சாதாரணமாக உட்கொள்ளும் காளானில் இந்த அளவுக்கான போதை மனநிலை இருக்காது. ஆனால், காட்டில் விளையக் கூடிய காளான்களை சாப்பிடுவோருக்கு நிதானம் தவறுதல், தன்னிலை மறத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
மயக்க உணர்வு : பலர் காளான் சாப்பிட்ட பிறகு சோர்வாக காணப்படுவார்கள். சிலருக்கு உடனடியாக தூக்கம் வரும். காளான் உணவு உங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால், உடனடியாக அதன் அறிகுறிகளை காட்டிவிடும். நீங்கள் மிகவும் அசௌகரியமாக உணருவீர்கள். உங்கள் ஆற்றல் மிக, மிக குறைந்துவிடும்.