Paristamil Navigation Paristamil advert login

புதிய மாதம்.. புதிய மாற்றங்கள்!!

புதிய மாதம்.. புதிய மாற்றங்கள்!!

1 ஆடி 2025 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 1291


இன்று ஜூலை 1, புதிய மாதத்தில் பல்வேறு மாறுதல்கள், சட்ட திருத்தங்கள், விலை மாற்றங்கள் போன்றன நடைமுறைக்கு வருகின்றன. அவற்றை தொகுத்து தருகிறது இந்த பதிவு.

சிகரெட் புகைக்க தடை!!

பொது இடங்களில் சிகரெட் புகைக்க இந்த ஜூலையில் இருந்து தடைவிதிக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக ஜூன் 29 ஆம் திகதியே இது நடைமுறைக்கு வந்துள்ளது. பூங்கா, தோட்டம், கடற்கரை பாடசாலைக்கு அருகே, பொது கழிவறை, குளியலறை, பேருந்து தரிப்பிடம், நூலகங்களுக்கு அருகே, நீச்சல் தடாகங்களில், விளையாட்டு அரங்கங்கள் போன்ற இடங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், அருந்தகங்கள் மற்றும் அதன் முற்றங்களுக்கு இந்த தடை விதிக்கப்படவில்லை.

எரிவாயு!

இன்று முதல் எரிவாயு கட்டணம் அதிகரிப்புக்கு உள்ளாகிறது. ஒவ்வொரு ஜூலை மாதத்திலும் எதிர்பார்க்கக்கூடியதுதான்.  இம்முறை 6.1% சதவீதத்தால் அதிகரிக்கிறது. இதனால் வெப்பமூட்டிக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு கட்டணம் வருடத்துக்கு 13 யூரோக்களும், வெந்நீருக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கான கட்டணம் சராசரியாக 3.63 யூரோக்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

ஊக்கத்தொகை அதிகரிப்பு!

இலத்திரனியல் வாகனங்களை வாங்குவோருக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் வீதம் மாறுதலுக்கு உள்ளாகிறது. அத்தோடு ஊக்கத்தொகை அதிகரிக்கவும் படுகிறது.

அதன்படி, இதுவரை ஒரே அளவில் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை, இன்று முதல் குடும்பத்தின் வருமானத்தை கருத்தில் கொண்டு தொகை வேறுபடும் என தெரிவிக்கப்பட்டுகிறது. 

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 4,200 யூரோக்கள் வரையும், நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 3,100 யூரோக்களும், அதிக வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 200 யூரோக்கள் முதல் 1,200 யூரோக்கள் வரையும் தொகை மாறுபடும். 

இலத்திரனியல் வாகனம் வாங்குவோர் இந்த ஊக்கத்தொகையை பெற இரண்டு நிபந்தனைகளை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒன்று நீங்கள் வாங்கும் வாகனம் 47,000 யூரோக்களுக்கு (வரியுடன் சேர்ந்து) கீழ் இருக்கவேண்டும். இரண்டாவது அதன் எடை 2.4 தொன்களுக்கு கீழ் இருக்கவேண்டும்.

மருத்துவச்சான்றிதழில் மாற்றம்!!

சுகயீன விடுமுறை எடுத்துக்கொண்டமைக்காக சமர்ப்பிக்கப்படும் சான்றிதழில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் 8 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய மோசடியும், 2024 ஆம் ஆண்டில் 30 மில்லியன் பெறுமதியுடைய மோசடியும் இடம்பெற்றதை அடுத்து, காப்புறுதி நிறுவனம் உஷார் நிலையை அடைந்துள்ளது. 

அதன்படி, மருத்துவச்சான்றிதழ்கள் பிரதி எடுக்கப்பட்ட காகிதமாகவோ, ஸ்கேன் செய்யப்பட்ட காகிதமாகவோ இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படாது எனவும், அதன் உண்மையான படிவமான Cerfa இல் சுகயீன விடுப்பு பதிவுசெய்யப்பட்டு நிரப்பப்பட்டிருக்கவேண்டும். இல்லை என்றால் அன்றைய நாளுக்குரிய ஊதியம் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

வேலை தேடுவோர்!

வேலைதேடுவோருக்கான ஊக்கத்தொகை (allocations chômage) சிறிய சதவீதத்தால் அதிகரிக்கிறது.

இன்று ஜூலை 1 ஆம் திகதி முதல் இந்த தொகை 5% சதவீதத்தால் - 31.97 யூரோக்களில் இருந்து - 32.13 யூரோக்களாக அதிகரிக்கிறது. 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்