இஸ்ரேல் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 935 பேர் பலி! ஈரான் அறிவிப்பு

1 ஆடி 2025 செவ்வாய் 11:26 | பார்வைகள் : 320
இஸ்ரேலுடனான 12 நாள் வான்வழி மோதலில் ஈரானில் 935 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் நீதித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பை நீதித்துறை செய்தித் தொடர்பாளர் அஸ்கர் ஜஹாங்கீர் திங்களன்று வெளியிட்டார். இதனை அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் 38 குழந்தைகளும் 132 பெண்களும் அடங்குவர் என்று ஜஹாங்கீர் உறுதிப்படுத்தினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் முன், ஈரான் சுகாதார அமைச்சகம் 610 பேர் உயிரிழந்ததாக தெரிவித்திருந்த நிலையில், இந்த புதிய எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தெஹ்ரானின் எவின் சிறைச்சாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கையையும் ஜஹாங்கீர் திருத்தினார்.
முன்னர் 71 பேர் பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது 79 பேர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் ஜூன் 13-ஆம் திகதி தொடங்கியது. இதில் இஸ்ரேல் ஈரான் அணுசக்தி வசதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இதில் உயர்மட்ட ராணுவத் தளபதிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது 1980களில் ஈராக்குடனான போருக்குப் பிறகு இஸ்லாமிய குடியரசிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடி இதுவாகும்.
இதற்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேலிய ராணுவ தளங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
ஜூன் 22-ஆம் திகதி அமெரிக்கா இந்த மோதலில் இணைந்தது. ஈரான் அணுசக்தி வசதிகள் மீது தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.