நடிகையாக அறிமுகமாகும் மோகன்லால் மகள்...?

1 ஆடி 2025 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 169
மோகன்லால் மகனைத் தொடர்ந்து அவருடைய மகளும் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான மோகன்லால் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘துடரும்’ மலையாள படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலிட்டு வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பு காரணமாக படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. முன்னதாக வெளியான ‘எம்புரான்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், ரூ.300 கோடி வசூலை நெருங்கி மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் என்ற பெருமையை பெற்றது.
இவருடைய மகன் பிரணவ் மோகன்லால் சிறு வயதிலேயே மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘ஆதி’ மலையாள படத்தில் நாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான ‘ஹிருதயம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மலையாள சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
தந்தை - மகன் ஆகியோர் மலையாள சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நிலையில், மோகன்லாலின் மகள் விஷ்மயா தற்போது ஹீரோயினாக மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் படத்தை 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆன்டனி ஜோசப் இயக்க உள்ளார். அந்த திரைப்படத்திற்கு 'தொடக்கம்' என்ற தலைப்பை வைத்திருக்கின்றனர். மலையாள திரை உலகின் தந்தை, மகன், மகள் என மூவரும் தற்போது நடிகர்களாக வலம் வரவுள்ளனர்.