தபால் பெட்டிக்குள் திறப்பு.. ஒரு மில்லியன் பெறுமதியான நகைகள் மாயம்!!

1 ஆவணி 2025 வெள்ளி 13:02 | பார்வைகள் : 1677
வீட்டின் உரிமையாளர் ஒருவர், வீட்டுத்திறப்பை தபால் பெட்டிக்குள் போட்டுச் சென்ற நிலையில், அவரது வீட்டில் இருந்து ஒரு மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பரிஸ் 5 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம், நேற்று முன் தினம், ஜூலை 30 புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. Rue Amyot வீதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் பெண் ஒருவர், இரண்டு வாரகால விடுமுறைக்காக வெளி மாவட்டம் ஒன்றுக்குச் சென்று, புதன்கிழமை வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது வீடு அலங்கோலமாக இருந்ததோடு, அவரது ஒரு மில்லியன் மதிப்புள்ள நகைகளும் களவு போயிருந்தன.
உடனடியாக அவர் காவல்துறையினரை அழைத்துள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் திறப்பை அவர் கதவில் உள்ள தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.