பெண்கள் பிறப்புறுப்பின் மீது இருக்கும் முடிகளை அகற்றுவது தவறா..?
18 புரட்டாசி 2021 சனி 13:10 | பார்வைகள் : 9405
84 சதவீதம் பெண்கள் பிறப்பு உறுப்பில் உள்ள முடிகளை அகற்றுவதாக ஆய்வு சொல்கிறது. ஆனால் மருத்துவர்கள் இது மிகவும் ஆபத்தான செயல் என்கின்றனர்.அதாவது பிறப்பு உறுப்பில் முடியை எடுப்பதும் எடுக்காததும் அவரவர் விருப்பம். ஆனால் அங்கு முடி வளர்வது சில தேவையான காரணங்களுக்காக என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கு மிக முக்கிய இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, பிறப்புறுப்பு மிகவும் மென்மையானது என்பதால் எங்கும், எதிலும் உராய்வுகள் இல்லாமல் பாதுகாக்கவே முடி வளர்கிறது. அடுத்ததாக தொற்று, அரிப்பு , எரிச்சல்கள் ஏற்படாமல் வெஜினாவை பாதுகாக்கிறது. இதனால் நேரடியாக பாக்டீரியாக்களோ, தொற்றுகளோ வெஜினாவிற்குள் நுழைய முடியாது. குறிப்பாக உடலுறவின் போது ஏற்படும் தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கவே இந்த முடிகள் என்கின்றனர்.
அடுத்ததாக பிறப்பு உறுப்பின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. அதாவது வியர்வை நீரை இந்த முடிகள் உறிஞ்சிக்கொண்டு பிறப்பு உறுப்பை வறட்சி அடையாமலும், வெப்பநிலையை சீராகவும் பராமரிக்க உதவுகிறது.
அதேபோல் வீட்டிலேயே பல பெண்கள் ஷேவிங் மூலம் பிறப்புறுப்பில் உள்ள முடிகளை அகற்றுகின்றனர். இது மிகவும் ஆபத்தான முறை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நீங்கள் தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு வந்தால் அந்த இடத்தில் வளரும் முடிகளின் வேர்கள் சிதைக்கப்பட்டு அதனால் வீக்கம் உண்டாகலாம். எப்படியும் அங்கு முடி மீண்டும் வளரும். அப்படி வளரும் போது சருமத்திலேயே சுருட்டிக்கொண்டு நீளம் குறைந்து புதர்போல் மாறிவிடும் என உமன்ஸ் ஹெல்த் பத்திரிக்கையில் மருத்துவர் மைக்கேல் மெட்ஸ் கூறியுள்ளார்.
மேலும் அந்த இடத்தில் அரிப்பு, பருக்கள், கரும்புள்ளிகள் என சருமமும் சிதைந்து போகும். இவை பிறப்பு உறுப்பில் தொற்றை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கிறார். எனவே பிறப்பு உறுப்பில் வளரும் முடி உங்களுக்குத் தேவையானது. இருப்பினும் அதை நீக்கும் முடிவு உங்களுடையது என்பதால் சிந்தியுங்கள். கட்டாயம் நீக்க வேண்டும் என முடிவெடுத்தால் மகப்பேறு மருத்துவர் அல்லது சரும மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்.