Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரம்: பன்னீர் முடிவு

பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரம்: பன்னீர் முடிவு

4 ஆவணி 2025 திங்கள் 12:07 | பார்வைகள் : 133


தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பொய் சொல்கிறார்' என கூறிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை, மக்களிடம் எடுத்து செல்ல, பொதுக்கூட்டங்கள் நடத்தும்படி, தன் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக, கடந்த மாதம் இறுதியில் தமிழகம் வந்தார். அவரை வரவேற்க, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அனுமதி கோரினார். அவருக்கு அனுமதி தரப்படவில்லை.

குற்றச்சாட்டு


'அவர் பிரதமரை சந்திப்பதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விரும்பவில்லை. அதனால், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமரை சந்திக்க பன்னீர்செல்வத்தை அனுமதிக்கவில்லை' என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் தொடர்ச்சியாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பன்னீர்செல்வத்தை, அக்கட்சி கைவிட்டது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தன் மீது பன்னீர்செல்வம் சுமத்திய குற்றச்சாட்டை மறுத்த நாகேந்திரன், 'என்னிடம் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டிருந்தால், பிரதமரை சந்திக்க நானே ஏற்பாடு செய்திருப்பேன்' என்று பேட்டி அளித்தார்.

அதற்கு பதில் அளித்து பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:

நாகேந்திரன் கூறுவதில் எள்ளளவும் உண்மை இல்லை. பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன், நாகேந்திரனை ஆறு முறை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் என் அழைப்பை ஏற்று பேசவில்லை. உடனே, பேச வேண்டும் என்று சொல்லி, எஸ்.எம்.எஸ்., அனுப்பினேன்.

அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு, கடந்த மாதம் 24ம் தேதி, பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்த கடிதம் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டது. இவை அனைத்துக்கும் ஆதாரம் உள்ளது.

நான் பிரதமரை சந்திப்பதில், நாகேந்திரனுக்கு விருப்பம் இருந்திருந்தால், என்னிடம் பேசி இருக்கலாம். அவர் எதையும் செய்யவில்லை. இதிலிருந்தே நான் பிரதமரை சந்திப்பதில், அவருக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாகிறது. இனியாவது அவர் உண்மை பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

தெரியாது


இதுகுறித்து, ஈரோடு மாவட்டம் பவானியில் நாகேந்திரன் கூறியதாவது:

பன்னீர்செல்வம், என்னை தொடர்பு கொண்டது, எனக்கு கடிதம் அனுப்பியது குறித்து எதுவும் எனக்கு தெரியாது. இதற்கு ஆதாரம் இருந்தால், என்னிடம் அவர் காட்டட்டும்.

அவர் கூப்பிடும் போதெல்லாம், பல முறை பேசியுள்ளேன். இப்போது, அவர் என் மீது தவறான கருத்துகளை தெரிவிப்பது ஏன் என்று தெரியவில்லை.

சமீபத்தில் அவர் முதல்வரை நேரடியாக சந்தித்து பேசியுள்ளார். அவர்களுக்குள் ஏற்கனவே சுமுகமான உறவும், தொடர்பும் இருந்திருந்தால் தான், சந்தித்து பேசி இருக்க முடியும்.

இதையடுத்தே, அவர் தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார். முடிவெடுத்து செயல்பட்டு விட்டு, தற்போது, ஒரு காரணத்தை சொல்கிறார்.

நான் அவர் குறித்து குறை கூற மாட்டேன். அ.தி.மு.க.,வில் அதிக இடங்களை நாங்கள் கேட்க மாட்டோம். எங்களின் நோக்கம் தி.மு.க., ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி செய்தியாளர்கள் நேற்று பன்னீர்செல்வத்திடம் கேட்டனர். அப்போது, நாகேந்திரனுக்கு, தான் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.,சை காண்பித்தார். அதன்பின் அவர் வெளியிட்ட அறிக்கை:

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., தொடர் தோல்விகளை சந்தித்து, மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. கட்சியை மீட்கும் போராட்டத்தில், நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அழிவுப்பாதை


இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை எடுத்துச் செல்லவும், தி.மு.க., ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள், தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அ.தி.மு.க.,வை அழிவுப் பாதையில் அழைத்து செல்வதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும், கட்சியினர் ஆங்காங்கே பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும்.

கட்சி தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து, அதற்கேற்ப கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்