பொது சிவில் சட்டம் பற்றி அரசியலமைப்பு கூறுவது என்ன; தெளிவுபடுத்திய சந்திரசூட்

4 ஆவணி 2025 திங்கள் 14:07 | பார்வைகள் : 1321
நமது அரசியலமைப்பு, பொது சிவில் சட்டத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம்,'' என சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவிற்கு பிறகு சந்திரசூட் நிருபர்களிடம் பேசினார்.
அரசியலமைப்புக்கும், அதனால் நிறுவப்பெற்ற அமைப்புகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சந்திரசூட், '' அனைத்து நேரங்களிலும் அரசியலமைப்பு இங்கு தான் இருக்கிறது,'' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: கடந்த 75 ஆண்டுகளில் நமது அரசியலமைப்பு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. நமது நாட்டில் ஏற்பட்ட பெருந்தொற்று, உள்நாட்டு மற்றும் சவால்களை நிர்வாகமும் சந்தித்தது. ஆனால், அரசியலமைப்பின் உண்மையான முக்கியத்துவம், அது நாட்டிற்கு அளித்துள்ள ஸ்திரத்தன்மையில் அமைந்துள்ளது.
நமது நாட்டில் பல்வேறு சமூகங்கள், மதங்கள், பிராந்தியங்கள் மற்றும் கலாசாரங்கள் ஆகியவற்றை ஒரே அமைப்பாக அரசியலமைப்பு இணைக்கிறது. இதுவே இந்தியாவை ஒரே நாடாக மாற்றுகிறது.
நமது அரசியலமைப்பு பொது சிவில் சட்டத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆன பிறகாவது,அது வெளிப்படுத்தும் விருப்பம் மற்றும் நோக்கத்தை புரிந்து கொள்வது கட்டாயம்.
அதற்கு முன்னர் நமது சமுதாயத்தின் அனைவரின் நம்பிக்கையை பெற வேண்டும். இந்திய சமுதாயத்தின் உண்மையான எதிர்காலத்துக்கு அது உகந்தது. இவ்வாறு அவர் கூறினார்.