பெண் பலி… காட்டுத்தீயினால் 11,000 ஹெக்டேயர்கள் நாசம்!

6 ஆவணி 2025 புதன் 08:09 | பார்வைகள் : 4082
Aude மாவட்டத்தில் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் தீயினால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று காலை 6 மணி நிலவரப்படி 11,000 ஹெக்டேயர்கள் காடு எரிந்து சாம்பலாகியுள்ளது.
Saint-Laurent-de-la-Cabrerisse எனும் சிறு கிராமப்பகுதி கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இன்று காலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் வீடு முழுவதுமாக எரிந்துள்ளது.
மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் தீயணைப்புபடை வீரர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Aude மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளியூரில் இருந்தால் அவர்கள் வீடு திரும்பவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீதிகள் மூடப்பட்டுள்ளன. A9 வீதி Perpignan தொடக்கம் Narbonne வரை மூடப்பட்டுள்ளது.
1,500 தீயணைப்பு படையினர் களத்தில் உள்ளனர். ஐந்து உலங்குவானூர்திகள், 300 தண்ணீர் கலன்கள் பயன்படுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.
அத்தோடு, காலநிலை சாதகம் இல்லாமல் உள்ளதாக தீயணைப்பு படை கவலை வெளியிட்டுள்ளது.