பீஹாரில் 65 லட்சம் வாக்காளர் நீக்கம்: விபரம் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு

7 ஆவணி 2025 வியாழன் 11:55 | பார்வைகள் : 147
பீஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்த விபரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீஹாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் தலைமையில், தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி கடந்த ஒரு மாதமாக அங்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடந்தன.
விபரம் வெளியிடுங்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள் என அந்த பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் கமிஷன் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 1ம் தேதி அன்று, வரைவு வாக்காளர் பட்டியலையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அரசுசாரா அமைப்பு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் கமிஷன் வெளியிட உத்தரவிடக்கோரியது.
மேலும், உயிரிழந்தவர்கள் எத்தனை பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் எத்தனை பேர் உள்ளிட்டவிபரங்களையும் தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இம்மனு நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் மற்றும் கோடீஸ்வர் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது என்.ஜி.ஓ., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணிடம், 'தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது.
உரிய நேரத்தில் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் கமிஷன் வெளியிடும்' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சில அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலில், பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம் உயிரிழப்பா அல்லது நிரந்தர இடப்பெயர்வா என்ற தெளிவான விளக்கம் இல்லை, என வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதாடினார்.
மேலும், 75 சதவீத வாக்காளர்கள் தேர்தல் கமிஷன் பரிந்துரைத்த 11 ஆவணங்களில் ஒன்றை கூட வழங்கவில்லை என்றும், அவர்களது பெயர்கள் அனைத்தும் பூத் அலுவலரின் பரிந்துரையின் பேரிலேயே சேர்க்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
பதில் மனு இதை குறித்துக் கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஒவ்வொரு வாக்காளரும் பாதிக்கப்படலாம் என தோன்றுகிறது. எனவே, உரிய தகவல் தேவை. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வரும் 9ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதை வழக்கறிஞர் பூஷணும் பார்க்கட்டும். அப்போது எது மறைக்கப்பட்டது, எது மறைக்கப்படவில்லை என்பதை முடிவு செய்யலாம்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025