Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க வரி விதிப்புக்கு அடிபணிய மாட்டோம்!

அமெரிக்க வரி விதிப்புக்கு அடிபணிய மாட்டோம்!

8 ஆவணி 2025 வெள்ளி 08:04 | பார்வைகள் : 154


இந்திய விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்ய முடியாது. அமெரிக்காவின் மரபணு மாற்ற வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி தர முடியாது. இதற்காக எவ்வளவு அதிகமாக வரிகள் விதித்தாலும் அடிபணிய மாட்டோம். அதை எதிர்கொள்ள தயார்,'' என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இரு தரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுகள் தொடர்ந்து வரும் நிலையிலும், அவர் இப்படி அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்திய வேளாண் மற்றும் பால்பொருட்கள் சந்தையில் காலுான்ற முடியாததால், அதிபர் டிரம்ப் அடுக்கடுக்காக வரிகளை உயர்த்திக் கொண்டே போனார்.

சம்மதிக்கவில்லை


குறிப்பாக சோளம், சோயாபீன்ஸ், ஆப்பிள்கள், பாதாம் பருப்பு மற்றும் எத்தனால் மீது இந்தியா வரிகளை குறைக்க வேண்டும் என அமெரிக்கா விரும்பியது.

மேலும், அமெரிக்க பால் பொருட்களையும் இந்திய சந்தைக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பதால், அமெரிக்க பொருட்கள் மீது வரிகளை குறைக்க இந்தியா சம்மதிக்கவில்லை.

எனவே, இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வரி சவால்களை ஏற்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் நுாற்றாண்டு பிறந்தநாளையொட்டி, டில்லியில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

இதில் பங்கேற்ற பிரதமர் பேசியதாவது:

இந்திய விவசாயிகள், மீனவர்கள் நலனில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. இதற்காக மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது நன்கு தெரியும். அதற்கு தயாராகவே இருக்கிறேன்.

வரிகளை குறைக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் மரபணு மாற்று வேளாண் பொருட்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது.

தேசத்தின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் வலிமையே முது கெலும்பு. இதன் காரணமாகவே விவசாயிகள் நலனுக்காக பி.எம்., கிசான், பி.எம்., பசல் பீமா யோஜனா, பி.எம்., க்ருஷி சின்சாய் யோஜனா, பி.எம்., கிசான் சம்பதா யோஜனா ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

தீர்க்கதரிசி


சமீபத்தில் கூட வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக பி.எம்., தன தான்ய யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது.

பசுமை புரட்சியாளரான டாக்டர் சுவாமிநாதன் வேளாண் துறையில் தீர்க்கதரிசியாக விளங்கினார். பருவநிலை மாறுபாடு பிரச்னையை சமாளிக்க வேண்டுமெனில், மறந்து போன பாரம்பரிய பயிர்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பது அவசியம் என அவர் அப்போதே வலியுறுத்தினார்.

வெயில், மழை, வெள்ளம் என அனைத்து வகையான பருவநிலைகளை சமாளிக்க வேண்டுமெனில், சதுப்பு நில தாவரங்களின் மரபணு பண்புகளை பயிர்களுக்கு புகுத்த வேண்டும் என டாக்டர் சுவாமிநாதன் வலியுறுத்தினார். இன்றைய காலக்கட்டத்திற்குஅவரது இந்த யோசனை பெரிதும் உதவும்.

சுற்றுச்சூழல் மற்றும் மண் ஆரோக்கத்தியதற்கு சுவாமிநாதன் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்தார். ஊரக சமூகம்


மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்க 'உயிர் கிராமங்கள்' என்ற யோசனையை முன்வைத்தார். 'சமூக விதை வங்கிகள்' மற்றும் பணப்பயிர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற யோசனைகளையும் அவர் வழங்கினார்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான், நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பழிக்கு பழி; வரிக்கு வரி இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தது போல, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 50 சதவீத வரி விதித்து பதிலடி தர வேண்டும் என காங்., எம்.பி., சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அமெரிக்காவை தவிர்த்து, இந்திய பொருட்களுக்கான சந்தைப்படுத்தலுக்கு மாற்று வழிகளை கண்டறிய வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்பதற்காக, இந்தியா மீது இப்படி வரிச்சுமைகளை சுமத்துவது அநியாயமானது. இதற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியக்கூடாது. பழிக்குபழி என்பது போல, வரிக்கு வரி விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


பிரதமரை சந்தித்த தமிழக விவசாயிகள் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் குழுவினர் பிரதமர் மோடியை பார்லிமென்டில் நேற்று சந்தித்தனர். இதுகுறித்து பிரதமர் தன் சமூகவலைதளத்தில் குறிப்பிடுகையில், 'புதிய கண்டுபிடிப்புகள், உற்பத்தி திறனை ஊக்குவித்தல், நிலைத்தன்மையை அதிகரித்தல் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றில் தமிழக விவசாயிகளின் கவனம் மற்றும் அனுபவங்கள் பற்றி கேட்டறிந்தது உற்சாகம் அளிப்பதாக இருந்தது' என, குறிப்பிட்டுள்ளார்.


மிரட்டலுக்கு என்ன காரணம்? அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கும் வற்புறுத்தலுக்கும் என்ன காரணம் என்பதை பிரதமர் மோடி வெளிப்படையாக பேச வேண்டும் என காங்., வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பேசிய காங்., எம்.பி., மணிஷ் திவாரி, ''மத்திய அரசு ஏன் மவுனம் காக்கிறது. இந்தியாவை மிரட்டுவதன் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் எதை சாதிக்க நினைக்கிறார்? இந்த மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் என்ன காரணம் என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இதற்கு முன்பாக இப்படியொரு நெருக்கடி, அமெரிக்காவிடம் இருந்து நமக்கு ஏற்பட்டதில்லை.  இரு தரப்பு வர்த்தக பேச்சு, வரி பேரங்கள் குறித்த நிலவரம் தொடர்பாக மத்திய அரசு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்'' என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்