Paristamil Navigation Paristamil advert login

கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையத்திற்கான பணியைத் தொடங்கிய ரஷ்யா

கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையத்திற்கான பணியைத் தொடங்கிய ரஷ்யா

8 ஆவணி 2025 வெள்ளி 18:09 | பார்வைகள் : 219


கஜகஸ்தான் நாட்டில் ரஷ்ய பொறியாளர்கள் முதல் அணுமின் நிலையத்திற்கான பணியைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உலகின் மிகப்பெரிய யுரேனிய உற்பத்தி நாடாக கஜகஸ்தான் உள்ளது. ஆனால் இந்நாட்டில் அணுமின் நிலையம் அமைக்கப்படவில்லை.

 

சோவியத் யூனியனாக ரஷ்யா இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி சோதனைகள் கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்தின.

 

 

இருப்பினும் கஜகஸ்தானில் பரந்த எரிசக்தி வளங்கள் இருந்தபோதிலும் அங்கு தொடர்ந்து மின் பற்றாக்குறை நிலவுவதால் அணுமின் நிலையம் அமைக்கப்பட வேண்டிய சூழல் உருவாகியது.

 

இதற்கான ஒப்பந்தத்திற்காக பிரான்ஸ் மற்றும் தென் கொரியா நாடுகள் ஏலத்தில் இறங்கின. ஆனால் ரஷ்யா, சீனா நாடுகளை கஜகஸ்தான் தேர்தெடுத்தது.

 

அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் இரண்டு கூடுதல் அணுமின் நிலையங்களை உருவாக்கும் என்றும், இந்த ஆண்டு இறுதியில் விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், கஜகஸ்தானின் முதல் அணுமின் நிலையத்திற்கான பணிகளை ரஷ்ய பொறியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

 

ரஷ்யா, கஜகஸ்தான் அணுசக்தி நிறுவனங்கள் சிறந்த தளத்தைத் தீர்மானிக்கவும், ஆலைக்கான திட்ட ஆவணங்களைத் தயாரிக்கவும் பொறியியல் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளன.

 

மத்திய ஆசியாவில் ரஷ்யா தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

 

அதேபோல் சீனாவும், ஐரோப்பாவும் வளங்கள் நிறைந்த பிராந்தியத்தில் கால்பதிக்க போட்டியிடுவதாகவும் கூறப்படுகிறது.

 

 

இதற்கிடையில், மற்றொரு ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் ஒரு அணுசக்தி நிலையத்தையும், கிர்கிஸ்தானில் ஒரு சிறிய அணு உலையையும் உருவாக்க திட்டமிட்டு, பிராந்தியத்தில் வேறு இடங்களில் அணுசக்தி திட்டங்களையும் ரஷ்யா முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்