மீண்டும் புதிய அரசியலமைப்பு

10 ஆவணி 2025 ஞாயிறு 17:41 | பார்வைகள் : 121
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் முழுதாய் நிறைவுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் கடந்த மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வுக்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா புதிய அரசியமைப்பு சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுக்கின்ற, முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக கேள்விகளை தொடுத்திருந்தார்.
அந்தக்கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதிய அரசியலமைப்புக்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தமது ஆட்சி நிறைவுக்கு வருவதற்குள் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் உறுதியாக கூறியிருந்தார்.
பிரதமரின் கூற்றில் சிறு மயக்கம் உள்ளது. அதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா இல்லை, தற்போதைய அரசியலமைப்பில் மறுசீரமைப்புச் செய்யப்படுமா என்ற விடயத்தில் தெளிவான விளக்கம் காணப்படவில்லை. இந்த நிலைமையானது, எதிர்க்கட்சிக்களுக்கு ஒருவித கிலேச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அத்தகைய சூழலில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் தொடர்பாக பரிசீலிப்பதற்காகவும் அக்குறித்த புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130இன் கீழ் சிறப்பு நோக்கத்திற்கான பாராளுமன்றக் குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையொன்றை எதிர்கட்சிகளின் சார்பில் முன்னெடுப்பதற்கான பூர்வாங்கப்பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த பிரேரணையானது, பெரும்பாலும் பொது எதிரணிகளின் பிரேரணையாகவே முன்வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அதற்கான பேச்சுக்கள் தற்போது முன்னேற்றகரமான நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உண்மையில் ஜே.வி.பி புதிய அரசியலமைப்பு பணிகளுக்கான செயற்பாடுகளை சத்தமின்றி ஆரம்பித்துள்ளது. அக்கட்சிக்கு மிக நெருக்கமான சட்டத்தரணிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களை ஒன்றிணைத்து வரைவு தயாரிக்கின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தகவலறிந்த வரையில், இந்த அரசியலமைப்பு வரைவுச் செயற்பாடுகள் அனைத்தும் மிகமிக இரகசியமாகவே பேணப்பட்டு வருகின்றன. இந்த வரைவுச் செயற்பாடுகள் தேசிய மக்கள் சக்தியினரை மையப்படுத்திய துறைசார்ந்தவர்களால் முன்னெடுக்கப்படுகின்றதா இல்லை ஜே.வி.பி. தலைமையகமாக பெலவத்தவின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ரில்வின் சில்வாவின் கட்டுப்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதில் தான் குழப்பங்கள் நீடிக்கின்றன.
எவ்வாறாயினும், இச்செயற்பாடு அநுர அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் இரண்டாம் வருட இறுதியில் அல்லது மூன்றாம் வருட நடுப்பகுதியில் தான் வெளிப்படுத்தப்படவுள்ளது. அதுவரையில், புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதா அல்லது, அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களைச் செய்வதா என்பதைவெளிப்படுத்துவதற்கு அநுரவும் அவரது தோழர்களும் தயாராக இல்லை.
அண்மையில் ரில்வின் சில்வா, நாட்டில் 'முறைமை மாற்றத்தினை' ஏற்படுத்தி பொருளாதார ரீதியில் முன்னோக்கி நகர்ந்து செல்வதாக இருந்தால் ஆகக்குறைந்தது தசாப்த காலம் தேவைப்படும் என்று கூறியிருப்பதன் ஊடாக, குறைந்தது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருப்பதற்கு அத்தரப்பு திட்டமிடுகின்றது என்பது வெளிப்பட்டுள்ளது.
அநுரகுமாரவின் அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் புதிய அரசியலமைப்பொன்றையோ அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றையோ கொண்டுவர வேண்டிய தேவை உள்ளதென்பதை அவர்கள் உள்ளார்த்தமாக உணர்ந்திருக்கின்றார்கள். அதற்கு காரணங்கள் உள்ளன.
குறிப்பாக, அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு எதிராக நாடாளவிய ரீதியில் ஏற்பட்டுள்ள 'எதிரான மனோநிலை' நிச்சயமாக அடுத்துவருகின்ற காலத்தில் வலுவடைந்து திரட்சியடைகின்றபோது அது ஆட்சியின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும்.
அத்தகைய சூழலை சமாளிப்பதென்றால் ஜே.வி.பி.யிடம் காணப்படுகின்ற 'அநுர' என்ற 'தேர்தல் அரசியல் முத்திரயை' மட்டும் பயன்படுத்தி சமாளிக்க முடியாது. அந்த மூலோபாயம் தொடர்ந்து வெற்றிபெறுமா என்ற கேள்விகளும் உள்ளன.
'அநுர' என்ற தனிமனிதனுக்கும் பேச்சாற்றலுக்கும் இன்னமும் நாடாளவிய ரீதியில் 'இரசனை மிகு வரவேற்பு' இருந்தாலும் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி முரண்பாடுகளும் அதனையொத்த செயற்பாடுகளும் வாக்குகளை அலையாக திரட்டுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்
அவ்விதமான சூழலில் 2029இல் 'அநுர'வை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலுக்கு மீண்டும் முகங்கொடுப்பதாக இருந்தால் அது சவால்கள் நிறைந்த முட்படுக்கைப் பயணம். ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலில் சறுக்கினால் அடுத்துவருகின்ற தேர்தல்களின் முடிவுகளும் அதன்பின்னரான விளைவுகளும் பற்றிக் கூறவேண்டியதில்லை.
ஆகவே, தான் தென்னிலங்கையில் ஏற்படவுள்ள வாக்குவங்கிச் சரிவை வடக்கு, கிழக்கைப் பயன்படுத்தி ஈடுசெய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அல்லது புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை முன்னெடுகிறது அநுர அரசாங்கம்.
அந்த வகையில் இரண்டாவது தடவையும் ஆட்சியை தக்கவைப்பதற்காகனதொரு 'பிடி'யாகவே புதிய அரசியலமைப்பு மையப்படுத்திய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது கிடைக்கின்ற உள்வீட்டுத் தகவல்களின் பிரகாரம், ஜனாதிபதி அநுரவும், அவரது தாய்வீடான பெலவத்த ஜே.வி.பி.தலைமையகமும் 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதை' முதலாவது இலக்காகக் கொண்டிருக்கின்றன.
இந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதன் ஊடாக, தமக்கு பெரும்சவாலாக இருக்கின்ற 51 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை ஜனாதிபதி வேட்பாளர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மிகப்பெரிய தலையிடி நீக்கிவிடும். மறுபக்கத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கிய வரலாற்றுப்பெருமையும் ஒருங்கே கிடைக்கும்.
பொறுப்புக்கூறல், நீதிவிசாரணை என்று தொடர்ச்சியாக கடிந்துகொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை சமாளித்துக்கொள்வதற்கானதொரு உபாயமாகவும், இராஜதந்திர மட்டத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முனையும் தரப்புக்களை புறமொதுக்குவதற்கான உபாயமாகவும் புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தினை பயன்படுத்த முனைகிறது அநுர அரசாங்கம்.
குறித்த செயற்பாட்டுக்குள் ஏலவே ஸ்தாபிக்கப்பட்டு செயல்திறனற்றிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம், உண்மை, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்டவற்றையும் உள்ளீர்த்துக் வினைத்திறனற்ற கண்துடைப்புக்கான 'தேசிய பொறிமுறையை' ஸ்தாபித்துக்கொள்வதற்கும் முனைப்புக்கள் உள்ளன.
அடுத்தபடியாக, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தவிசாளர்கள், கணக்காய்வாளர் நாயகம், வெளிநாடுகளுக்கான இராஜதந்திரிகள் உள்ளிட்ட அனைத்து உயர் பதவிகளுக்கான நியமனங்களில் தமக்கு விரும்பிய நியமனங்களை செய்வதற்கு அரசியலமைப்பு பேரவை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருகின்றது.
ஆகவே, முட்டுக்கட்டையாக இருக்கும் அரசியலமைப்பு பேரவையின் வலுவைக் குறைப்பதுவும் ஜனாதிபதி அநுரவின் விசேட நோக்கமாக உள்ளது. இதனைவிடவும், தேர்தல் முறைமை மாற்றம் மாகாண சபை முறைமை நீக்கம் உள்ளிட்ட விடயங்களையும் புதிய அரசியலமைப்பு உள்வாங்க வேண்டும் என்ற நோக்கமும் ஜே.வி.பிக்குள் காணப்படுகின்றது.
ஜே.வி.பியின் கொள்கைகளை தேசிய கொள்கைகளுக்குள் புகுத்தி, அதனை மையப்படுத்தியதாக நாட்டின் அடிப்படைச்சட்டமான அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற நோக்குநிலைகளும் அவர்களுக்கு தாராளமாகவே உள்ளன.
இதனைவிடவும், சீனக் கம்னியூஸக் கட்சியுடன் ஜே.விபி 'கட்சிசார்ந்த' இருதரப்பு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ள நிலையில், 'தனிக்கட்சி ஆதிக்கத்தினை' மையப்படுத்திய அரசியலமைப்பு ஏற்பாடுகளும் உள்வாங்கப்படலாம்.
ஜே.வி.பி. தலைமையிலான அநுர அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை அல்லது, அரசியல் மறுசீரமைப்பு பணிகளை தமது இருப்பை நிலைநிறுத்துவதற்கான உபாயமாகவே முழுக்க முழுக்க பயன்படுத்த முனைகிறது.
மாறாக, தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வுடன் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று சிந்திப்பதே முட்டாள்தனமானது.
அவ்விதமான நிலையில், அநுர அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளையோ அல்லது அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையோ கையாள்வதற்கு தமிழ்த் தரப்பு தீர்க்கமான நிலைப்பாடுகளுடன் தற்போதிருந்தே முனைவதே ஆகக்குறைந்த வியூகமாக இருக்கும்.
தவிர்த்து, நல்லாட்சிக்கால புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை கைவிட வேண்டும் என்று கஜேந்திரகுமார் வலியுறுத்துவதும், தானும் இணைந்து அப்பணியில் ஈடுபட்டதால் அதனைக் கைவிடமுடியாது என்ற சுயமரியாதைக்குள் நின்று சுமந்திரன் 'கட்சி தீர்மானத்தை' காரணம் காண்பிப்பதாலும் நன்மை ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு தான்.
ஏனென்றால், வடக்கு, கிழக்கில் தமிழ் பிரதிநிதிகள் எண்ணிக்கைக்கு நிகராக ஜே.வி.பி.யும் மக்கள் பிரதிநிதித்துவங்களை கொண்டிருக்கின்றது. ஆகவே, தமிழ் பிரதிநிதிகள் வடக்கு, கிழக்கு மக்களின் ஏகோபித்த நிலைப்பாடு என்று கட்சி முரண்பாடுகளுக்கு அப்பால் அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைத்தால் கூட ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகம் தான்.
இதற்குள், சகோதர முஸ்லிம் தரப்புக்களையும் உள்ளீர்க்க வேண்டிய தேவையும் தமிழ்த் தரப்புக்கு உள்ளது. அத்தரப்பு தனியாக அரசியலமைப்பு விடயங்களை கையாள முனைந்தால் நிலைமைகள் அதோ கதிதான்.
நன்றி virakesari
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1