யாழில் மலேரியா தொற்றால் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழப்பு

10 ஆவணி 2025 ஞாயிறு 17:41 | பார்வைகள் : 4518
மலேரியா தொற்றால், யாழ் போதனா மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்ததாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், நெடுந்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட 34 வயதுடைய நபர், யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அனுமதிக்கப் பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன் கொங்கோ நாட்டிலிருந்து நாடு திரும்பியிருந்தார்.
கடுமையான நோய் நிலையுடன் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, கடந்த ஆறு நாட்களாக யாழ் போதனா மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடுமையான தொற்று மற்றும் பல்வேறு அங்கங்களின் செயற்பாட்டு இழப்பால் நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார்.
மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில், அவர் மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.