Paristamil Navigation Paristamil advert login

தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளை இணைக்க பா.ஜ., ஆலோசனை

தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளை இணைக்க பா.ஜ., ஆலோசனை

11 ஆவணி 2025 திங்கள் 11:13 | பார்வைகள் : 140


அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த, பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளை இணைக்க, தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேர்தல் வெற்றிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மக்கள் சந்திப்பு வாயிலாக பிரசாரம் செய்து வருகிறார்.

பா.ஜ.,வும் வெற்றி வாகை சூட, தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை துவக்கி உள்ளது. சென்னை கமலாலயத்தில், தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாநிலத் தலைவர் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட 14 பேர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மத்திய அரசின் சாதனை திட்டங்களை, வீடு வீடாக, மக்களிடம் எடுத்து செல்வது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

லோக்சபா தேர்தலுக்கு பின், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றிய பின், கட்சியின் வளர்ச்சி நிலை; கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளை இணைப்பது; கூட்டணியை பலப்படுத்த த.வெ.க., நாம் தமிழர் போன்ற கட்சிகளை இணைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தே.ஜ., கூட்டணிக்கு, முக்குலத்தோர் ஓட்டு களை பெற, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரை இணைத்துக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மையக்குழு கூட்டம் முடிந்ததும் சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சி பாசறை நடந்தது.

கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில், தி.மு.க., அமைச்சர்கள் செய்த ஊழல்கள், மத்திய அரசு வழங்கிய நிதியில் முறைகேடு செய்தது குறித்து, மக்களிடம் பிரசாரம் செய்வது; தமிழகம் முழுதும் பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பது ஆகியவை குறித்து, சந்தோஷ் ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில், தமிழகம் முழுதும் இருந்து, 180 பேர் பங்கேற்றனர். இவர்களில், 40 பேர் பெண்கள். ஆனால், பா.ஜ., துணைத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட நடிகை குஷ்பு பங்கேற்கவில்லை.

மாநில அளவில் பதவி பெற்ற பின் நடந்த முதல் கூட்டத்தில், அவர் பங்கேற்காதது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்