நீம்ஸ் சிறைச்சாலையில் மசாஜ் மேசை கண்டுபிடிப்பு - ஜெரால்ட் தர்மனனின் பயணம் ஒத்திவைப்பு!!

12 ஆவணி 2025 செவ்வாய் 14:57 | பார்வைகள் : 548
Nîmes (Gard) சிறைச்சாலையின் புதிய கட்டடத் திறப்பு விழாவிற்காக, நாளை புதன்கிழமை செல்லத் திட்டமிட்டிருந்த நீதி அமைச்சர் ஜெரால்ட் தார்மனன், அங்கு மசாஜ் செய்யும் மேசை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், தனது வருகையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளார் என்று அவரது அணியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர், அந்த மசாஜ் மேசையை சிறைச்சாலை ஊழியர்களுக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக, பிரான்ஸ் சிறைகளில் சில விதிகளை கடுமையாக்கும் முயற்சியில் தர்மனன் ஈடுபட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரியில், துலூஸ்-செய்ஸ் (Toulouse-Seysses) சிறையில் கைதிகளுக்கு இலவச முகஅலங்காரம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, கல்வி, பிரெஞ்சு மொழி கற்றல் மற்றும் விளையாட்டைத் தவிர்ந்த அனைத்து 'வேடிக்கைச் செயல்பாடுகளையும்' நிறுத்துமாறு அவர் உத்தரவிட்டிருந்தார்.
அப்போது அவர், 'எல்லா குடிமக்களையும் அதிர்ச்சியடையச் செய்யும் செயல்பாடுகளைச் சிறையில் அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சம்பவம் எனக்கும் பெரும் அதிர்ச்சியளித்தது' என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் கடந்த வாரம் சிறையொன்றில் கைதியின் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டு அது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.