சுயநலமாக சிந்தித்ததே கிடையாது: வைகோ

14 ஆவணி 2025 வியாழன் 08:36 | பார்வைகள் : 188
நான் சுயநலமாக சிந்தித்ததே கிடையாது,'' என ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ பேசினார்.
திண்டுக்கல் நாகல்நகரில் மாவட்ட ம.தி.மு.க., சார்பில் நடந்த விவசாயிகள் , மீனவர்கள் துயரம் பற்றிய பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: சோகங்கள் சூழ்ந்த போதும் துரோகங்கள் தலைதுாக்கிய போதும் கட்சியை காப்பாற்றியது தொண்டர்கள் தான். நான் சுயநலமாக சிந்தித்து செயல்பட்டது கிடையாது. மக்கள், விவசாயிகள்,மீனவர்களுக்காக குரல் கொடுத்திருக்கும் நான் தான் ரியல் பெரியாரிஸ்ட்.
எனக்கு பண பலமோ, பத்திரிகை பலமோ கிடையாது. தமிழுக்கும், தமிழருக்கும், ஈழத்தமிழருக்காகவே எனது குரல் ஒலித்திருக்கிறது. ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக நான் துாக்கிய வாளை ஒருபோதும் கீழிறக்கமாட்டேன்.
நான் அணி மாறப்போவதாக பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கப்போவதாக சில பத்திரிகைகள் தவறான அவதுாறு செய்தி பரப்புகிறது. சில நேரங்களில் கூட்டணி தவறுகள் நடந்திருக்கலாம். அது மனித இயல்பு. நான் இதுவரை தி.மு.க., ஆட்சியை விமர்சித்தது கிடையாது. சின்ன சின்ன தவறுகள் நடந்திருக்கலாம். தேர்தலில் எத்தனை சீட் ஒதுக்கப்படும் எனும் விவாதத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை.
பா.ஜ., அரசு பயிர் காப்பீட்டு தொகையை தராமல் விவசாயிகளை கொடுமைப் படுத்துகிறது. வஞ்சிக்கிறது. இந்தியா -இலங்கை கிரிக்கெட் போட்டியில் இலங்கை தோற்றால் கூட தமிழக மீனவர்களை சுட்டு கொன்றிருக்கிறார்கள். மீனவர்களுக்கு பா.ஜ., ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இவ்வாறு பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று இரவு நடந்த ம.தி.மு.க. சார்பில் மீத்தேன்-மேகதாது விழிப்புணர்வு விளக்க பொதுக்கூட்டத்தில், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசியதாவது: ம.தி.மு.க.வில் வாரிசு அரசியல் என கூறுகின்றனர். எனது தாய் மாரியம்மாள் விடுதலைப்புலிகள் நலனுக்காக உண்ணாவிரதம் இருந்தார். எனது தம்பி ரவிச்சந்திரன் எனக்கு பல்வேறு உதவிகளை செய்தார்.
நான் நினைத்திருந்தால் யாருக்கும் பதவிகள் வழங்கிருக்க முடியும். யாரும் பதவிக்கு வர வேண்டாம் என் தான் நினைத்தேன். என் மகன் துரை வைகோ அரசியல் கட்சிக்கு வரக்கூடாது என்று சொன்னவன் நான். துரை வைகோ கட்சிக்கு வந்தது ஒரு சதவீதம் கூட எனக்கு விருப்பமில்லை.
ஆனால், மாவட்ட செயலாளர்கள், நிர்வாக குழுவின் விருப்பத்தின் பேரில்தான் துரை வைகோ அரசியலுக்கு வந்தார். கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் 106 பேரில் 104 பேர் ஓட்டு போட்டு தேர்வு செய்தனர். என் குடும்பம் தியாக குடும்பம். இன்னும் தியாகம் செய்ய தயாராக உள்ளோம்.
1978 ஆண்டு லோக்சபாவில், எனது கன்னிப் பேச்சில் நான் நாதியற்றவர்களுக்கு குரலாக இருந்து குரல் கொடுப்பேன் என்றும் முழங்கியவன். சோழமண்டலத்தில் மீத்தேன் திட்டத்தை விவசாய நிலங்களுக்காக மேகதாது என்ற திட்டத்தை முதலில் எதிர்த்தவன் நான்.
மன்னார்குடி ரங்கநாதன், இயற்கை விவசாயி நம்மாழ்வார் ஆகியோர் கொடுத்த அறிக்கையை லோக்சபாவில் வலியுறுத்தினேன். கடந்த 2016ம் ஆண்டு,டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். காவிரியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக காவேரி பாதுகாப்பு இயக்கத்தை நடத்தினேன்.
மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு கிடைக்கும் 48 டி.எம்.சி., தண்ணீரைத் தடைப்படும் என்பதற்காக போராடினேன். துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடினேன்.
பிரதமரின் கனவு திட்டமான நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்த கோர்ட்டில் தடை ஆணை பெற்று தடுத்தவன் நான். நான் சுய நலத்துக்காக அணி மாறவில்லை. 31 ஆண்டுகளாக தனித்து கட்சியை நிர்வாகிகள் காப்பாற்றி வருகின்றனர். கூட்டணிக்காக மாறுகிறார்கள் என சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நாங்கள் என்றும் திராவிட இயக்கத்தை விட்டு அணி மாறுவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.