சிவகார்த்திகேயனுடன் மோதும் பாலா ?

14 ஆவணி 2025 வியாழன் 22:41 | பார்வைகள் : 294
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இன்று உச்சம் தொட்டு நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த அமரன் படம் தான் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த படம் தான் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து கொடுத்து சாதனை படமாக அமைந்தது. அதுவரையில் காமெடி ஹீரோவாக திகழ்ந்த சிவகார்த்திகேயன் இந்தப் படத்திற்கு பிறகு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
மேலும், கோலிவுட்டின் அடுத்த தளபதி என்றெல்லாம் அப்போது பேச்சு அடிபட்டது. இதற்கு முக்கிய காரணம் கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுப்பது தான். இதை வைத்து பல விதமான பேச்சு கோட் படம் வெளியான போது அடிபட்டது.
அமரன் படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இதில் மதராஸி படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் படம் குறித்த அப்டேட் நாளுக்கு நாள் வந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் தான் பாலாவின் காந்தி கண்ணாடி படமும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான பாலா ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் தான் காந்தி கண்ணாடி. ஷெரீஃப் எழுதி இயக்கியுள்ள காநதி கண்ணாடி படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். பாலாவின் முதல் கனவு படமாக பார்க்கப்படும் இந்தப் படம் பாலாவின் சினிமா வாழ்க்கையில் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்த படமாக பார்க்கப்படுகிறது.