"கூலி" படம் எப்படி இருக்கிறது?

14 ஆவணி 2025 வியாழன் 23:41 | பார்வைகள் : 296
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் 14 ஆயிரம் தொழிலாளர்களை கொண்ட ஷிப்பிங் நிறுவனம் நடத்துகிறார் தொழிலதிபரான நாகர்ஜூனா. அவரின் சட்டவிரோத தொழில்களை கவனிக்கும் விசுவாசியாக இருக்கிறார் 'மஞ்சும்மல் பாய்ஸ்' புகழ் சவுபின் ஷாகிர். போலீசுக்கு உளவு சொல்பவர்களை துறைமுகத்தில் மற்ற தொழிலாளர்கள் முன்னிலையிலேயே கொடூரமாக கொல்கிறார்.
விசாகப்பட்டினத்தில் இருக்கும் தனது உயிர் நண்பன் சத்யராஜ் மறைவு செய்தி கேள்விப்பட்டு அங்கே செல்கிறார், சென்னையில் மேன்சன் நடத்தி வரும் ரஜினிகாந்த். அப்போது சத்யராஜ் இயற்கையாக இறக்கவில்லை என ரஜினிக்கு தெரிய வருகிறது. அது குறித்து விசாரிக்க, இறந்தவர்களை டக்கென எரித்து சாம்பலாக்கும் அதிநவீன ஒரு சேரை கண்டுபிடிக்கும் சத்யராஜ் சூழ்நிலை காரணமாக, நாகார்ஜூனாவால் அனுப்பபடும் பிணங்களை அதில் எரிப்பதும், அதில் சில பிரச்னைகள் என்றும் ரஜினிக்கு தெரிய வருகிறது. தனது நண்பன் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சத்யராஜ் செய்த அதே பிணம் எரிக்கும் வேலையை, சத்யராஜ் மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து செய்கிறார் ரஜினிகாந்த். அவருக்கு பல உண்மைகள் தெரிய வருகின்றன. ஒரு காலத்தில் கூலியாக இருந்த ரஜினிகாந்த் மாறியது ஏன்?, அவருக்கும் நாகார்ஜூனாவுக்கும் என்ன பிரச்னை? சத்யராஜூக்கும், ரஜினிக்குமான நட்பு எப்படிப்பட்டது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நாகார்ஜூனா செய்யும் சட்டவிரோத தொழில் என்ன? சத்யராஜை கொன்றது யார்? இந்த கதையில் உபேந்திரா, அமீர்கான் எப்படி உள்ளே வருகிறார்கள் என்பதற்கான விடை சொல்கிறது கூலி படத்தின் கதை.
சுருக்கமாக சொன்னால், விசாகப்பட்டினம் செல்லும் ஒரு முன்னாள் கூலி தொழிலாளியின் கதை, அவர் ஏன் செல்கிறார், அங்கே என்ன செய்கிறார் என்பதை ஆக் ஷன், வன்முறை, பழிவாங்கல் கலந்து ரத்தமும், சதையுமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ரஜினியின் 50வது ஆண்டு சினிமா வாழ்க்கையில் வரும் படம், பல கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்த படம், நாகார்ஜூனா, உபேந்திரா, அமீர்கான், சவுபின் ஷாகிர் போன்ற மற்ற மொழி பிரபல நடிகர்கள் நடித்த படம், ரிலீசுக்கு முன்பே 200 கோடி லாபம் சம்பாதித்த படம், ஆயிரம் கோடியை அள்ளப்போகும் முதல் தமிழ் படம் உட்பட பயங்கர பில்டப்புடன் வந்திருக்கிறது கூலி. உண்மையில் அதற்கேற்ற விஷயங்கள், சீன்கள் படத்தில் இருக்கிறதா?
இது, பக்காக ரஜினி படமா என்றால் கண்டிப்பாக இல்லை. காரணம் ரஜினி படங்களுக்கே உரிய ஸ்டைல், காமெடி, பன்ச் டயலாக், குழந்தைகள், பெண்களை கவரும் சீன்கள், ஆட்டம் போட வைக்கும் பாடல்கள், விசில் அடிக்க வைக்கும் இடங்கள், கை தட்ட வைக்கும் சூழ்நிலைகள் இல்லை. வன்முறை, ஆக் ஷன், ரத்தம் கலந்து தனக்கே உரிய ஸ்டைலில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அதிலும் ஓவர் வன்முறை. படம் தொடங்கி கடைசி வரை யாராவது செத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவரையும் கொடூரமாக கொலை செய்கிறார்கள் இன்னொரு தரப்பினர். அதுவே, ரஜினி படத்தில் இப்படியொரு கதை என்று சோர்வடைய வைக்கிறது. அதேசமயம், லோகேசின் விக்ரம் படத்தில் இருந்த விறுவிறுப்பு, ஆக்ஷன், மாநகரத்தில் இருந்த அடடே போட வைக்கும் திரைக்கதை, டுவிஸ்ட் இதில் இல்லை என்பது பெரிய மைனஸ்.
தேவா என்ற பெயரில் மேன்சன் நடத்தும் கேரக்டரில் ரஜினி நன்றாக நடித்து இருக்கிறார். குடி தினமும் கொல்லும் என்று அட்வைஸ் செய்து ஒரு அழகான பாடலில் ஆடுகிறார். அப்புறம், ஆக் ஷனில் கலக்குகிறார். சத்யராஜ் இறந்தவுடன் அவர் கண் கலங்குகிற சீன்கள், ஸ்ருதிஹாசன் உடடான எமோஷனல் சீன்கள், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அதிடிரக்கிற சீன்கள், சவுபின் ஷாகிருக்கும் அவருக்குமான சீன்கள், மேன்சன் சண்டைக்காட்சி, கிளைமாக்சில் முத்திரை பதித்து இருக்கிறார். குறிப்பாக, பிளாஷ்பேக் சீன்களில் அவர் நடிப்பும், அந்த ஸ்டைலும் செம. ஆனால், ரஜினி படம் என்று நம்பி வரும் ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றி இருக்கிறார். பல சீன்களில் அவர் சும்மா இருக்கிறார். சில சமயம் அவருக்காக மற்றவர்கள் சண்டை போடுகிறார்கள். அவர் காஸ்ட்யூம் கூட சுமார். குறிப்பாக, தனது 50வது படத்தில் குடிக்கிறார், பீடி பிடிக்கிறார். இதில் பீடியை புகழும் சீன்கள் வேறு. இன்னமுமா நீங்கள் இப்படிப்பட்ட காட்சிளை விடவில்லை சூப்பர்ஸ்டாரே?
படத்தின் இன்னொரு பிளஸ் மேக்கப் அதிகம் இல்லாவிட்டாலும், அழுத்தமான நடிப்பை தரும் ஸ்ருதிஹாசன். அவருக்கும் ரஜினிக்குமான, கிளைமாக்ஸ் உருக்கம். இவர்களை தவிர படம் முழுக்க ஸ்கோர் பண்ணுபவர் வில்லத்தனமான வேடத்தில் வரும் சவுபின் ஷாகிர்தான். மோனிகா பாடல் அவர் ஆடுகிற ஆட்டம் அடடா? மனிதர் பின்னி எடுத்து இருக்கிறார். அப்புறம் கொடூர வில்லனாக அவர் செய்கிற செயல்கள், அவருக்கான டுவிஸ்ட், ரஜினியுடன் மோதல், மாறுபட்ட நடிப்பு என பல இடங்களில் கலக்கியிருக்கிறார். என்ன, பேச்சில் வரும் மலையாள வாடையை தவிர்த்து இருக்கலாம்.
இவர்களை தவிர மெயின் வில்லனாக வரும் தெலுங்கு ஹீரோ நாகார்ஜூனா சில இடங்களில் மனதில் நிற்கிறார். ஆனால், அவரின் இமேஜ், நடிப்பு வில்லத்தனத்துக்கு செட்டாகவில்லை. பல படங்களில் மென்மையான ஹீரோவாக பார்த்த அவரை இந்த கேரக்டரில் பார்க்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. வேறு நடிகரை வில்லனாக நடிக்க வைத்து இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாகி இருக்கும்.
கிளைமாக்சில் ஒரு சண்டைக்காட்சியில் சில சீன்கள் வந்து எதிரிகளை துவம்சம் செய்கிறார் கன்னட ஹீரோ உபேந்திரா. கிளைமாக்சில் ஏகப்பட்ட பில்டப்புடன் இன்னொரு பெரிய தாதாவாக வருகிறார் அமீர்கான். அவர் ஏதோ செய்யப்போகிறார் என நினைத்தால் காமெடி பண்ணுகிறார். அவர் உடல் மொழி, பேச்சு, காஸ்ட்யூம் பெரிய ஏமாற்றத்தை தருகிறது. ஒரு சிறந்த நடிகரை வேஸ்ட் செய்து இருக்கிறார் இயக்குனர். சத்யராஜூக்கும் சில சீன்கள், சில வசனங்கள், அவ்வளவுதான் டக்கென செத்து போய்விடுகிறார். இப்படி சீனியர், பிரபல நடிகர்களை சரியாக பயன்படுத்தாதது படம் செல்லும் வெற்றி பாதையை குறைத்துவிடுகிறது
இவர்களை தவிர, நாகார்ஜூனா மகனாக வரும் கண்ணா ரவி நடிப்பு ஓகே. அவர் காதலியாக வரும் ரச்சிதாராம், ஆரம்பத்தில் மென்மையான காதலியாக வந்து கிளைமாக்சுக்கு முன்னால் இன்னொரு பரிமாணத்துக்கு வருகிறார். படத்தின் நல்ல காட்சிகளில் அதுவும் ஒன்று. சார்லி குடித்துக் கொண்டே இருக்கிறார். சில சீன்களில் வந்து கொல்லப்படுகிறார் காளி வெங்கட். இன்னும் ஏகப்பட்ட நடிகர்கள் , வில்லன்கள் இருந்தாலும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. நிறைய நடிகர்கள் இருந்தாலும், அவர்களை சரியாக பயன்படுத்திவில்லை என்று தோன்றுகிறது.
அனிருத் இசையை பொறுத்தவரையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால், அதில் பாதியை கூட அவர் பூர்த்தி செய்யவில்லை. பாடல்களில் மோனிகா மட்டுமே ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் கர்நாடக சங்கீதம் பின்னணியிலான அந்த மேன்சன் சண்டைக்காட்சி மட்டுமே காட்சியை ஸ்பீடு ஆக்கிறது. தங்கமகனில் வரும் வா வா பக்கம் வா இளையராஜா பாடல், கல்லுாரி வாசல் படத்தில் வரும் தேவாவின் லயோலோ கல்லுாரி மிக்சில் வரும் பின்னணி இசை புதுமை. மற்றபடி, கோலமாவு கோகிலா, ஜெயிலர் பாணியிலான இசையை எதிர்பார்த்து வந்தால், அட போங்க அனி. படத்தில் மேக்கிங் மட்டும் நன்றாக இருக்கிறது. அதிலும் ஏகப்பட்ட லாஜிக் மீறல்.
படம் முழுக்க யாராவது கொடூரமாக கொலை செய்யப்படுவதும், ரத்தம் கொட்டி சாவதும் லோகேசுக்கு பிடித்தமாக இருக்கலாம். படம் பார்க்க வருபவர்களை நெளிய வைக்கிறது. நல்லவேளை ஏ சான்றிதழ் என்பதால் 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க முடியாது. தங்க கடத்தல், காஸ்ட்லி வாட்ச், எரிக்கும் மிஷின், டைம் டிராவல் என பல எதிர்பார்ப்புகளுடன் வந்தால் இதயம் கடத்தும் கதை என பல படங்களில் பார்த்த உடல் உறுப்பு கடத்தலை மையமாக வைத்து ஏமாற்றி இருக்கிறார் இயக்குனர். அதிலும் வில்லன், ஹீரோ மோதலில் சுவாரஸ்யம் இல்லை. இவ்வளவு பெரிய கடத்தல் கதையில் போலீஸ், கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு வேலை இல்லை. இன்டர்நேஷனல் தாதா என்ற பில்டப் தனி. நட்பை சொல்லும் படத்தில் அதற்கான காட்சிகள் அழுத்தமாக இருக்க வேண்டாமா? அதை தேடி பார்க்க வேண்டியது இருக்கிறது.
ரஜினிக்கும், ஸ்ருதிஹாசனுக்குமான உறவை இன்னும் சில சீன்களில் அழுத்தமாக, சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகள் பரபரப்பாக இருக்கிறது. ஆனால், அதை டக்கென முடித்து இருக்கிறார்கள். ஒருவேளை கூலி 2 அடுத்த பாகம் எடுக்கலாம் என்று கணக்கு போட்டு இருக்கிறார்கள் போல. விசாகப்பட்டினம் துறை முகம் காட்சிகள், சண்டைக்காட்சிகளில் கேமராமேன் கிரிஷ் கங்காதரன் வொர்க் ஓகே. பிளாஷ்பேக் காட்சிகளில் ஆர்ட் டைரக்டர் சதீஷ், கிராபிக்ஸ் டீம் வொர்க் அருமை. இன்னும் கை தட்டல் வாங்கும்படி சண்டைகாட்சிகளை அமைத்து இருக்கலாம் அன்பறிவ்.
கூலி படத்தில் நடித்தவர்கள் பிரபலமானவர்கள், பட்ஜெட் பெரிசு, எதிர்பார்ப்பு அதிகம். ஆனால், ஏனோ தானோ திரைக்கதையால், அதிக வன்முறை, சண்டைகாட்சிகளால் படத்தை பின்னோக்கி இழுத்து இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இது என் படம், இது என் பாணி, இப்படிதான் எடுப்பேன் என்ற பிடிவாதத்தால் ரசிகர்களிடம் திட்டு வாங்குகிறார். முதற்பாதி பெரிய ஏமாற்றம். படத்தின் நீளமும் அதிகம். ரஜினி ரசிகர்கள் விரும்பும் காட்சிகள், பில்டப், பாடல்கள், காமெடி, கமர்ஷியல் சீன்கள் இல்லாதது இன்னும் ஏமாற்றம்