தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மன்னார் காற்றாலை மின் திட்டம்

15 ஆவணி 2025 வெள்ளி 14:37 | பார்வைகள் : 606
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
2ஆம் கட்ட காற்றாலை அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் மக்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
அந்த சந்திப்பில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி, அந்த காலப்பகுதியில் அதன் சாதக பாதகங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கும், மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.