சதுரங்கத்தில் சாதனை படைத்த 10 வயது சிறுமி

15 ஆவணி 2025 வெள்ளி 18:57 | பார்வைகள் : 495
வடமேற்கு லண்டனைச் சேர்ந்த 10 வயது பிரிட்டிஷ் சிறுமி போதனா சிவானந்தன், சதுரங்க உலகில் ஒரு அசாதாரண சாதனையைப் படைத்து, மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டரை வென்ற பெண் வீராங்கனையாக வரலாறு படைத்துள்ளார்.
2025 பிரிட்டிஷ் சதுரங்க சாம்பியன்ஷிப்பின் லிவர்பூலில் நடந்த இறுதிப் போட்டியில், 60 வயது கிராண்ட்மாஸ்டர் பீட் வெல்ஸை போதனா திறமையாக வீழ்த்தினார்.
வெறும் 10 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 3 நாட்கள் வயதில், இந்த இளம் திறமையாளர், 2019இல் 10 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 20 நாட்கள் வயதில் கிராண்ட்மாஸ்டரை வென்ற அமெரிக்காவின் கரிசா யிப்பின் சாதனையை முறியடித்தார் என்று அனைத்துலக சதுரங்க கூட்டமைப்பு (FIDE) உறுதிப்படுத்தியது.
பெண்கள் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை நோக்கி போதனா தற்போது பெண்கள் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்று, பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்கு ஒரு படி முன்னேறியுள்ளார்.
சதுரங்க உலகில் மிக உயர்ந்த கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை, உலக சாம்பியன் குகேஷ் டொம்மராஜு மற்றும் உலகின் முதல் நிலை வீரர் மக்னஸ் கார்ல்சன் போன்றவர்கள் வைத்திருக்கின்றனர்.
போதனாவின் குடும்பத்தில் யாரும் சதுரங்கத்தில் முன்பு சிறந்து விளங்கவில்லை என்று அவரது தந்தை தெரிவித்தார்.
கோவிட் தொற்றுநோய் காலத்தில், 5 வயதில், தந்தையின் நண்பர் ஒருவர் பரிசாக அளித்த சதுரங்க பலகை மற்றும் புத்தகங்கள் மூலம் போதனா இந்த விளையாட்டை கற்றுக்கொள்ளத் தொடங்கினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.