சுதர்சன சக்ரா! : உள்நாட்டில் தயாராகும் வான் பாதுகாப்பு கவசம்

17 ஆவணி 2025 ஞாயிறு 05:43 | பார்வைகள் : 100
இஸ்ரேலின், 'அயர்ன் டோம்' போல், இந்தியாவின் வான்பரப்பை பாதுகாக்க, 'சுதர்சன சக்ரா' திட்டம் தயாராகி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே மிகுந்த கவனத்துடன், பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படும் இந்த வான் கவசம், 2035ல் முழு செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
டில்லியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், 'சுதர்சன சக்ரா' வான் பாதுகாப்பு கவசம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். “ஸ்ரீ கிருஷ்ணரின் சுதர்சன சக்ரா பாதையை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். ''நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக, உருவாக்கப்பட்டு வரும் இந்த கவச அமைப்பு, எந்தவொரு தாக்குதலையும் தாங்கும் திறன் கொண்டது. அடுத்த, 10 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்,” என, தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: நம் நாட்டின் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு வலையமைப்பை, ஒரு அதிநவீன ஏவுகணை தாக்குதல் படையுடன் இணைப்பதே, சுதர்சன சக்ரா திட்டத்தின் மையமாகும். அதன்படி, ஐ.ஏ.சி.சி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட ஏர் கமாண்ட் மற்றும் கன்ட்ரோல் சிஸ்டம் நெட்வொர்கை, ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுகணை கட்டமைப்புடன் சேர்த்து பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் இலக்கு.
இந்த கலவையானது, அச்சுறுத்தல்களை கண்டறிந்து, துல்லியமான தாக்குதல்களை வழங்குவதற்கான தடையற்ற வலையமைப்பை உருவாக்கும். இதன் வாயிலாக, நாட்டின் அனைத்து பகுதிகளும் பாதுகாக்கப்படும்.
அச்சுறுத்தல்
ஐ.ஏ.சி.சி.எஸ்., என்பது ஒரு முழுமையான தானியங்கி, நிகழ்நேர வான் பாதுகாப்பு கட்டளை அமைப்பாகும். இது, பல்வேறு சென்சார்கள், ரேடார்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை ஒருங்கிணைத்து, விரிவான வான் சூழ்நிலை தொடர்பான தகவல்களை வழங்குகிறது.இது, வான், நிலம் மற்றும் கடற்படைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை செயல்படுத்துகிறது. அதுமட்டுமின்றி வான்வழி அச்சுறுத்தல்களுக்கு விரைவான பதிலடி தருவதையும் உறுதி செய்கிறது. ஐ.ஏ.சி.சி.எஸ்., என்பது, 'பைபர் ஆப்டிக்' அடிப்படையிலான தொலைதொடர்பு கட்டமைப்புடன் சென்சார்கள், போர் விமானங்கள், ஆகாஷ், பராக் - 8, எம்.ஆர்.எஸ்.ஏ.எம்., மற்றும் எஸ் - 400 போன்ற ஏவுகணை அமைப்புகளுக்கு உடனடி தகவல்களை வழங்குகின்றன. இதனால், எதிரி விமானங்கள், ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளை கண்காணிக்கவும், பொருத்தமான எதிர் நடவடிக்கைகளை விரைவாகப் பயன்படுத்தவும் படைகளுக்கு உதவுகிறது.
அச்சுறுத்தல்களை கண்காணிப்பதிலும், ஆயுதப் பணிகளை மேம்படுத்துவதிலும் உதவுவதற்காக ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு முறையிலான திறன்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய தற்காப்பு போர்வை இஸ்ரேலின் மிகவும் பெருமையாகக் கூறப்படும், 'அயர்ன் டோம்' மற்றும் அமெரிக்காவின், 'கோல்டன் டோம்' போல் ஒரு சிறந்த ஏவுகணை பாதுகாப்பு கேடயமாக செயல்படும். 'ஹேக்கிங் - பிஷிங்' போன்ற டிஜிட்டல் அச்சுறுத்தல்களை சமாளிக்க, சைபர் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளை, இந்த நவீன வான் பாதுகாப்பு கவசமான சுதர்சன சக்ரா உள்ளடக்கியுள்ளது.
பன்மடங்கு சக்தி
தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து, இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 2035க்குள் சுதர்சன சக்ராவை முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதை மத்திய அரசு நோக்கமாக வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட எஸ் - 400 வான் கவசம் நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. அதேசமயம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஆகாஷ்தீர்' கருவியும் எதிரிகளின் ஏவுகணைகளை பந்தாடின. தற்போது உருவாக்கப்பட்டு வரும் சுதர்சன சக்ரா, இந்த ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசத்தைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.