அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறுவது பொய்: ராமதாஸ்

17 ஆவணி 2025 ஞாயிறு 09:46 | பார்வைகள் : 101
அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறுவது பொய் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: சில விஷமிகள் பொய்யான தகவல்களை பரப்பி இருக்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் நாளை சந்திக்கிறேன். திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறும். முக்கியமான பல தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறோம்.
தவறாக பொதுக்குழு உறுப்பினர்கள் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஊடக நண்பர்களும் கட்டாயம் வர வேண்டும். பொதுக்குழுவில் குறைந்தது 4 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். நேற்று தைலாபுரம் இல்லத்திற்கு வந்து இருந்த அன்புமணி வணக்கம் சொன்னார்.
நானும் வணக்கம் சொன்னேன். வேறு எந்த பேச்சும் இல்லை. வணக்கத்தை வரவேற்பது. இந்த வணக்கம், அந்த வணக்கத்தை வரவேற்பது, இவ்வளவு தானே. அன்புமணி என்னிடம் ஆசிர்வாதமெல்லாம் வாங்கவில்லை. அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறுவது பொய். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
திட்டமிட்டப்படி நடக்கும்!
முன்னதாக, சமூக வலைதளத்தில் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் நாளை திட்டமிட்டபடி பாமக சிறப்பு பொதுக்குழு நடை பெறும். அதில் எந்த வித மாற்றமும் இல்லை.
பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புகின்றன. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.