விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதப் போகிறதா சூர்யாவின் ‘கருப்பு’?

17 ஆவணி 2025 ஞாயிறு 14:33 | பார்வைகள் : 226
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் கருப்பு படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் சூர்யா வழக்கறிஞர் மற்றும் கருப்பு ஆகிய இரு வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவுக்கு திரையரங்க ஹிட்டாக எந்த படமும் அமையவில்லை. அவரின் சமீபத்தைய ஹிட்டான ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ கூட ஓடிடிகளில் ரிலிஸாகிதான் வெற்றி பெற்றன. இதனால் சூர்யா தியேட்டர் ரிலீஸில் ஒரு பெரிய ஹிட் கொடுக்க கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார். அதை நிகழ்த்தும் விதமாக ‘கருப்பு’ திரைப்படம் மாஸ் மசாலா சினிமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் முதலில் தீபாவளிக்கு ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ‘கருப்பு’ திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. கருப்பு படத்தைக் கைப்பற்றியுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் பொங்கல் பண்டிகைக்குதான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என தயாரிப்பாளர்களை நெருக்குவதாக சொல்லப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் ‘ஜனநாயகன்’ படத்தை ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.