சொத்து குவித்ததாக ஐ.பெரியசாமி வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு

18 ஆவணி 2025 திங்கள் 11:48 | பார்வைகள் : 102
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள, தி.மு.க., அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, 'செக்' வைக்கும் வகையில், அவரது வீடு மற்றும் மகள், மகன்களின் வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று, திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. இவர், 2006 முதல் 2011 வரை தி.மு.க,, ஆட்சியில், வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் தொடரப்பட்ட இந்த வழக்கில், 2012ல் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அவரை விடுவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த விடுதலை செய்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இதன் விசாரணை, நாளை மறுதினம் வர உள்ளது.
உடைக்கப்பட்ட பூட்டு அதேபோல், முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட்டுக்கு, வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்திலும், அமைச்சர் சிக்கினார். இதில், அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக கூறி, 2022ல் பெரியசாமியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், திண்டுக்கல் துரைராஜ் நகர் இரண்டாவது தெருவில் உள்ள அமைச்சர் பெரியசாமி வீட்டுக்கு, மூன்று கார்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் நான்கு பேர், மத்திய அரசின் சி.ஆர்.பி.எப்., படையினர் பாதுகாப்புடன், நேற்று காலை 6:45 மணி முதல் சோதனையை துவங்கினர்.
அதேபோல், சீலப்பாடியிலுள்ள அமைச்சர் பெரியசாமியின் மகனும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில்குமார் வீட்டிலும், திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள அவரது மகள் இந்திராணி வீட்டிலும், அமலாக்கத் துறை அதிகாரிகள் குழுவினர் தனித்தனியாக சோதனை நடத்தினர்.
செம்பட்டி - வத்தலகுண்டு சாலையில் உள்ள இளைய மகன் பிரபுவுக்கு சொந்தமான இரண்டு, 'ஸ்பின்னிங் மில்'களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் பெரியசாமியின் அரசு பங்களாவிலும், நேற்று சோதனை நடத்தப்பட்டது.
ஒவ்வொரு அறைகளாக திறந்து சோதனை நடத்தியபோது, சில அறைகளின் சாவி இல்லை என, பணியாளர்கள் தெரிவித்தனர். அதனால், ஒரு அறையில் பூட்டு உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின், மற்ற அறைகளின் சாவிகள் அளிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, 'ஜெராக்ஸ்' இயந்திரத்தை எடுத்து வந்த அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்களை நகல் எடுத்துச் சென்றனர்.
அதேபோல், சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில், அமைச்சர் பெரியசாமி மற்றும் அவரது மகன் எம்.எல்.ஏ., செந்தில்குமார் அறைகளிலும், அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அனுமதியின்றி சோதனை செய்ததாக, சட்டசபை செயலர் சீனிவாசன் அளித்த புகாரில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொண்டர்கள் தர்ணா மேலும், தலைமை செயலகத்தில், அமைச்சர் பெரியசாமியின் அறைகளில் சோதனையிட, அமலாக்கத் துறை அதிகாரிகள் செல்வதாக தகவல் வெளியானது. இதனால், அமைச்சர் அறை பூட்டப்பட்டதுடன், தலைமை செயலகமும் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது.
மாநிலம் முழுதும், ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அதிகாலை துவங்கிய சோதனை, சில இடங்களில் மட்டும், 12 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.
திண்டுக்கல்லில், சோதனை குறித்து அறிந்த தி.மு.க.,வினர், அமைச்சர் பெரியசாமி, எம்.எல்.ஏ., செந்தில்குமார் வீடுகளுக்கு முன் குவிந்தனர்.
அமலாக்கத் துறையை கண்டித்து நேற்று காலை, சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர்; அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அந்த நேரத்தில், காரில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகளையும் தி.மு.க.,வினர் சூழ்ந்தனர். தி.மு.க., நிர்வாகிகள் தலையிட்டு, அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
மாலையில், கூடியிருந்த தொண்டர்களில் ஒருவரான சின்னாளபட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்; அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இச்சோதனையில், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான சில ஆவணங்கள் சிக்கியிருப்பதாக, அமலாக்கத் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.