வடகிழக்கு மாநிலங்களுக்கு போங்க; அமைச்சர்களுக்கு மோடி கறார் உத்தரவு

20 ஆடி 2025 ஞாயிறு 08:25 | பார்வைகள் : 140
சமீப காலமாக, வடகிழக்கு மாநிலங்கள் குறித்த செய்திகள் அதிகம் அடிபடுகின்றன; அங்கு பல நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பிரதமர் உட்பட பல அமைச்சர்களும், அடிக்கடி இந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
திடீரென, வடகிழக்கு மாநிலங்களுக்கு அமைச்சர்களின் வீசிட்'டிற்கு என்ன காரணம்? 'நம் வடகிழக்கு மாநிலங்களில், இயற்கை வளம் அதிகம்; கண் குளிர காண வேண்டிய நிறைய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
அத்துடன், சீனா, மியான்மர், வங்கதேசத்தோடு நம் எல்லை இந்த மாநிலங்களில் அமைந்துள்ளன. எனவே, அடிக்கடி இங்கு மத்திய அமைச்சர்கள் செல்ல வேண்டும் என, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்' என்று பா.ஜ.. வட்டாரங்களில் கூறுகின்றனர்.
சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேகாலயாவிற்கு சென்று, பல நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அசாம், மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு சென்று வந்தார்; தற்போது மீண்டும் செல்ல இருக்கிறார்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து, எந்த அமைச்சர், எந்த வடகிழக்கு மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என, ஒரு பட்டியலே தயார் செய்யப்பட்டு, சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாம்.