என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்

20 ஆடி 2025 ஞாயிறு 09:09 | பார்வைகள் : 156
எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். தேசமே முதன்மையானது'' என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்து உள்ளார்.
கேரளா மாநிலம், கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சசி தரூர் பேசியதாவது: கட்சியின் மீது மதிப்பு மற்றும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். தேசிய பாதுகாப்பு நலனுக்காக மற்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம். எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். தேசமே முதன்மையானது.
நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அந்த கட்சியின் நோக்கம், அதன் சொந்த வழியில் ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்குவதாகும். ராணுவம் மற்றும் அரசாங்கத்தை ஆதரிப்பதில் எனது நிலைப்பாட்டை பலர் விமர்சித்துள்ளனர். ஆனால் நான் நாட்டிற்கு இதுதான் சரியானது என்று நம்புவதால் நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்.
நான் இந்தியாவைப் பற்றி பேசும் போது என் கட்சியை விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்காகவும் பேசுகிறேன். அது மற்ற கட்சிகளுக்கும் பொருந்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். நான் இதை என் கட்சிக்கு மட்டுமல்ல. எல்லாக் கட்சிகளுக்கும் சொல்கிறேன். நாடு ஆபத்தில் இருக்கும்போது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சசி தரூர் கூறிய கருத்துக்கள், ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்குவதற்காக, வெளிநாடுகளுக்கு சென்ற அனைத்துக் கட்சி குழுவிற்கு தலைமை தாங்கிய பிறகு, காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக பேசப்படுவது குறித்து மறைமுகமாக விளக்கம் அளித்தது போல் அமைந்துள்ளது.