புலம்பெயர் மக்களுக்கு மிரட்டல் விடுத்த ஐரோப்பிய நாடு

21 ஆடி 2025 திங்கள் 13:41 | பார்வைகள் : 289
புலம்பெயர் மக்கள் ஐரோப்பாவிற்கு வர வேண்டாம் என்றும், வந்தால் சிறையில் அடைப்போம் அல்லது திருப்பி அனுப்புவோம் என கிரேக்க குடியேற்ற அமைச்சர் Thanos Plevris கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையை எதிர்பார்த்து கிரேக்கத்திற்கு வர வட ஆபிரிக்காவில் காத்திருக்கும் மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு அமைச்சர் Thanos Plevris இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆனால், எஞ்சிய ஐரோப்பிய நாடுகளைப் போன்று கிரேக்கமும் உண்மையான அகதிகளை ஆதரிக்கவும் உதவவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், எங்களை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பெண்கள், சிறார்கள் என கணக்கிலடங்காத மக்கள் கிரேக்கத்திற்கும் ஐரோப்பாவிற்கும் வந்தேறிய காலம் முடிவுக்கு வந்துள்ளதையே அவர் பதிவு செய்துள்ளார்.
கிரேக்கம் அகதிகளுக்கான தங்கும் விடுதியல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலர் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற பாதுகாப்பான நாடுகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் Thanos Plevris,
நீங்கள் கிரேக்கத்திற்கு சட்டவிரோதமாக படகு மூலம் வருவதென்றால், புகலிடம் எதிர்பார்க்க வேண்டாம், மாறாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல தயாராக வாருங்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை குறைந்தது 10,000 பேர்கள் கிரேக்கத்தின் மிகப்பெரிய தீவான கிரீட்டில் நுழைந்துள்ளனர். பெரும்பாலானோர் சில நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள லிபியாவில் இருந்தே வந்துள்ளனர்.
மட்டுமின்றி, குடியேற்ற அமைச்சராக Thanos Plevris பொறுப்புக்கு வந்ததன் பின்னர், ஜூலை முதல் வாரத்தில் மட்டும் 4,000 பேர்கள் சட்டவிரோதமாக கிரீட் தீவில் நுழைந்துள்ளனர்.
பொலிசாரும் கடலோரக்காவல் படைகளும் சட்டவிரோத வெளிநாட்டவர்களை கான்கிரீட் தரையில் தூங்க வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இன்றைய நமது பெரிய பிரச்சனை லிபியாவும், அவர்கள் யாரை அனுப்புகிறார்கள் என்பதும்தான் என வெளிப்படையாகவே சாடியுள்ளார் அமைச்சர் தானோஸ் பிளெவ்ரிஸ்.
லிபியா 200 முதல் 300 பேர்களை ஏற்றிச் செல்லும் பெரிய கப்பல்களைப் பயன்படுத்துகிறது. வந்தவர்களில் 85 சதவீதம் பேர் ஆண்கள், அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள்.
புதிய வாழ்க்கைக்காக ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக நுழைய அவர்கள் கிரேக்கத்தைப் பயன்படுத்துகிறார்கள் என பிளெவ்ரிஸ் குறிப்பிட்டுள்ளார்.