இந்திய எல்லை அருகே தண்ணீர் குண்டை உருவாக்கும் சீனா... மிகவும் செலவுமிகுந்த திட்டம்

21 ஆடி 2025 திங்கள் 13:41 | பார்வைகள் : 277
சீனாவின் மிகவும் செலவுமிகுந்த திட்டங்களில் ஒன்றான மெகா அணை திட்டத்தின் கட்டுமானத்தை அந்த நாடு உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இந்த மெகா அணையின் கீழ் பகுதி யார்லுங் சாங்போவிலும், மேல் பகுதி திபெத்தில் பிரம்மபுத்திரா நதியிலும் அமைய உள்ளது.
சீனாவின் இந்த அதிரடி முன்னெடுப்பு இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நீர்மட்டம் குறைந்து வரும் நாடுகளில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
ஆனால் இந்த திட்டம் முதன்மையாக வெளிப்புற நுகர்வுக்கான மின்சாரத்தை வழங்கும் என்றும், அதே நேரத்தில் ஜிசாங்கில் உள்ள உள்ளூர் தேவையையும் நிவர்த்தி செய்யும் என்றும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரம்மாண்டமான அணை கட்டுவதால் பிரம்மபுத்திராவின் கீழ்நிலை நாடுகளின் நலன்களுக்கு கடுமையாக தீங்கு விளைவிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
சீனாவின் மெகா அணைத் திட்டம் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி சீனத் தரப்பிடம் தங்களது கவலைகளைப் பதிவு செய்தது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்த அணை சீனாவின் மிகவும் செலவுமிகுந்த திட்டங்களில் ஒன்றாகும், மேலும் உலகின் மிகப்பெரிய அணையாக இருப்பதோடு, 167 பில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் தெரிய வந்துள்ளது.
சீனாவின் நீர்மின் திட்டங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் உட்பட, பிரம்மபுத்திரா நதி தொடர்பான அனைத்து முன்னேற்றங்களையும் இந்தியா கவனமாக கண்காணித்து வருகிறத.
மேலும் அதன் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
சீனாவின் இந்த மெகா திட்டமானது, இந்தியாவின் எல்லை அருகே அமையும் தண்ணீர் குண்டு என்றே பரவலாக குறிப்பிடப்படுகிறது.