இலங்கையில் ஊழலை ஒழிக்க போராடும் ஜப்பான்

21 ஆடி 2025 திங்கள் 13:41 | பார்வைகள் : 117
இலங்கையில் முதலீடு செய்வதில், ஜப்பானிய நிறுவனங்கள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மீள நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு, ஊழலை ஒழிப்பதும் நல்லாட்சியும் அவசியமான முன்நிபந்தனைகளாக உள்ளன என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா அண்மையில் கூறியுள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இலங்கை தீவிரமாக முயன்றுவரும் நிலையில், ஜப்பானிய தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற 4 ஆவது
ஜப்பானிய இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு கொள்கை உரையாடலின்போது அவர் இதனை கூறினார்.
ஜப்பான் வெளியுறவு பிரதி உதவி அமைச்சரும், ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு பணியகத்தின் இஷிசுகி ஹிடியோ, இலங்கை நிதியமைச்சின் புதிய செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது.
இலங்கையில் ஊழலால் பாதிக்கப்பட்ட ஜப்பான்
இலங்கையின் அபிவிருத்திக்கு நீண்ட காலமாக கைகொடுத்துவரும் ஜப்பான், இலங்கையில் ஊழல்களை ஒழிக்க வேண்டியதை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது. ஊழல் ஒழிப்புக்காக பல்வேறு உதவிகளையும் இலங்கைக்கு ஜப்பான் வழங்கிவருகிறது.
கடந்த மே மாதம் கொழும்பில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்குபற்றிய ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா, இலங்கையில் நிலவிய ஊழல்களால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக ஜப்பான் உள்ளதாக குமுறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதலீடுகளைச் செய்வதில் ஜப்பானிய நிறுவனங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அகியோ இசோமாட்டாவுக்கு முன்னர், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக பதவி வகித்த மிஸுகோஷி ஹிடேக்கியும் இலங்கையில் ஊழல்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல தடவைகள் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக் ஷ காலத்தில், ஜப்பானிய நிறுவனமொன்றிடம் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என்ற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதேவேளை, சர்வதேச அபிவிருத்திக்கான ஜப்பானிய முகவரத்தின் (ஜெய்க்கா) உதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான, இலகு ரயில் திட்டத்தை கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் ஒரு தலைபட்சமாக இரத்து செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து ஜப்பான் கடும் அதிருப்தி கொண்டிருந்தது. அதன்பின் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜப்பானிய உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கியிருந்தன.
2023 மே மாதம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டோக்கியோவுக்கு விஜயம் செய்து ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடாவை சந்தித்தபோது, மேற்படி திட்டம் இரத்துச் செய்யப்பட்டமைக்காக இலங்கை சார்பில் மன்னிப்பு கோரினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர், இலங்கையில் 11 அபிவிருத்தித் திட்டப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக ஜப்பான் அறிவித்தது.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என்பதை அப்போதைய ஜப்பானிய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி மீள உறுதிப்படுத்தினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒக்டோபர் முற்பகுதியில் 'ஜப்பானிய அபிவிருத்தி வரலாறும் இலங்கைக்கான செய்திகளும்' என்ற தலைப்பில் சொற்பொழிவுவொன்றை நிகழ்த்திய அப்போதைய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி, இலங்கையின் ஊழல்களை பற்றிய தனது அவதானிப்பை வெளியிட்டார்.
'இலங்கைக்கு நான் வந்தது முதல் அவதானித்ததில் இருந்து, இலங்கையில் ஊழல் தொடர்பில் இரு விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முதலாவதாக, ஊழலானது தலைவர்கள் மீது நாட்டு மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஒரு காரணமாகிறது.
தலைவர்கள் ஊழலில் ஈடுபடும்போது மக்கள் நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக இருப்பதை ஊக்கப்படுத்துவதை அது தடுக்கிறது. இது வரி செலுத்துவோருக்கு வரி ஏய்ப்பு செய்ய வசதியான சாக்குப்போக்குகளை வழங்குகிறது.
இரண்டாவதாக, இலங்கை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க விரும்பும்போது இது மிகவும் தீங்கு விளைவிக்கிறது' என அவர் குறிப்பிட்டிருந்தார்.
'ஜப்பானிய நிறுவனங்கள் அவற்றின் கடப்பாடுகளை இறுக்கமாக பின்பற்றி வருகின்றன அதனால் அவை இலஞ்சம் வழங்கமாட்டா. இலங்கையில் ஊழல் கலாசாரம் தொடர்ந்தால், இங்கு ஜப்பானிய முதலீடுகள் வருவதற்கான சாத்தியம் இல்லை' எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
ஊழலை ஒழிப்பதற்கு உறுதி பூண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நாட்டின் புதிய தலைவராக இலங்கை மக்கள் தெரிவுசெய்துள்ள நிலையில், நீண்ட காலமாக நாட்டை சீர்குலைத்துள்ள ஊழலை ஒழிப்பதற்கு அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது எனவும் முன்னாள் தூதுவர் ஹிட்டேக்கி அப்போது கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக பதவியேற்ற அக்கியோ இசோமாட்டாவும், இலங்கையில் ஊழல்களின் பாதிப்புகள் குறித்து காரசாரமான கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
ஊழல் ஒழிப்புக்காக 2.5 மில்லியன் டொலர் உதவி
ஊழலை ஒழிப்பதற்கு உதவும் ஜப்பானின் திட்டங்களின் வரிசையில், இலங்கையில் ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்தவும், பொது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கவும் மூன்றாண்டுத் திட்டத்துக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்கும் ஒப்பந்தமொன்று கொழும்பில் கடந்த முதலாம் திகதி கையெழுத்திடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (யூ.என்.டி.பி) உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு ஜப்பான் நிதி அளிக்கிறது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா மற்றும் யூ.என்.டி.பி.யின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நீதி அமைச்சர் ஹர்ஷா நாணயக்கார, சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க, இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கே.பி. ராஜபக் ஷ, சேதிய குணசேகர, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க குமநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இத் திட்டமானது ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவன திறனை மேம்படுத்துதல், பொது நிர்வாகம், முதலீடுகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல், திறமையான வழக்கு விசாரணை மற்றும் பொது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இத்திட்டம், நிறுவனங்களில் ஊழலைத் தடுப்பதற்கு ஆளுகை பொறிமுறைகளை வலுப்படுத்துதல், விசாரணை நடைமுறைகளை மேம்படுத்துதல், பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், குடிமக்களை மேம்படுத்துதல், மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் தரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
இது குறிப்பாக இளைஞர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் குடிமக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் முயல்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (யூ.என்.டி.பி.) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா, ‘‘இலங்கை ஊழலை எதிர்கொள்ள தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஜப்பனிய அரசு, மக்களின் தாராளமான நிதியுதவியுடன் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுடனான இந்த கூட்டாண்மை, நல்லாட்சியை நோக்கிய எமது கூட்டு பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது.
இந்தத் திட்டத்தின் தொடக்கம், நிறுவனங்களை வலுப்படுத்துவது மட்டுமல்ல, இது பொது நம்பிக்கையை மீட்டெடுப்பது, குடிமக்களை மேம்படுத்துவது, அனைவருக்கும் சமமான வாய்ப்பை உருவாக்குவது தொடர்பானது. 2025 – 2029 காலத்துக்கான இலங்கையின் தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், நிலையான வளர்ச்சிக்கு அமைப்பு ரீதியான தடைகளை அகற்றி, வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாசாரத்தை வளர்க்கும் ஒரு சமூக அளவிலான அணுகுமுறையை ஆதரிப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து நீடிப்பது மட்டுமல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்ய, தேசிய பங்காளிகளுடன் இணைந்து யூ.என்.டி.பி. தொடர்ந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது’’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த காலங்களிலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு ஊழல் ஒழிப்பு தொடர்பான பயிற்சிகள், செயலமர்வுகளை நடத்துவதற்கும் ஜப்பான் உதவியிருந்தது.
பாலியல் இலஞ்சம் தொடர்பாகவும் இலங்கையின் மருத்துவ, சட்டத்துறையினருக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் உதவியளித்திருந்தது.
பல நாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கு உதவ முன்வந்த நிலையில், இலங்கையில் ஊழல்களை வேரறுக்க உதவுதற்கும் ஜப்பான் ஆர்வம் செலுத்துகின்றது.
நன்றி virakesari