ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் சி.இ.ஓ., சந்தா கோச்சார் குற்றவாளி; உறுதி செய்தது தீர்ப்பாயம்

22 ஆடி 2025 செவ்வாய் 09:47 | பார்வைகள் : 152
வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்கியதில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் சி.இ.ஓ., சந்தா கோச்சார் 64 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதை, மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. மேலும், அவரது 78 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய எடுத்த முடிவு சரி என்றும் சந்தா கோச்சார் குற்றவாளி என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு, கோச்சார் தலைமையிலான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி குழு, வீடியோகான் நிறுவனத்துக்கு 300 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது. வங்கி கடன் வழங்கிய மறுநாளே, வீடியோகான் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்.இ.பி.எல்., நிறுவனத்தின் வாயிலாக 64 கோடி ரூபாய், சந்தா கோச்சாரின் கணவரான தீபக் கோச்சார் நிர்வகித்து வந்த என்.ஆர்.பி.எல்., எனப்படும் நுபவர் ரினியூவபிள் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.
இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், சந்தா கோச்சார் பதவி நீக்கப்பட்டார். இதுகுறித்து கடந்த 2019ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., 11,000 பக்கங்களுக்கு மேல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழுமத்தின் வி.என்.துாத் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றன.
கடந்த 2020 நவம்பரில் 78 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது. சொத்துக்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி, சந்தா கோச்சார் தீர்ப்பாயத்தில் மனு அளித்தார். அவருக்கு ஆதரவாக சொத்துக்களை விடுவிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சொத்துக்களை விடுவிக்க உத்தரவிட்டிருந்த அதிகாரியின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை உறுதி செய்தது. மேலும், லஞ்சம் பெற்றது உறுதியானதால், சந்தா கோச்சார் குற்றவாளி என்றும் தெரிவித்துள்ளது.