மொட்டை அடித்தால் முடி வேகமாக மற்றும் அடர்த்தியாக வளருமா..?

22 ஆடி 2025 செவ்வாய் 18:30 | பார்வைகள் : 241
பிறந்த குழந்தைக்கு மொட்டை அடிக்கும் பழக்கம் தொன்றுதொட்டு இன்று வரை பின்பற்றப்படுகிறது. அதற்கு மத ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் ஒரு காரணம் குழந்தைக்கு மொட்டை அடிப்பதால் முடி நன்கு அடர்த்தியாக வளரும் என்பதுதான். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. பெரியவர்களும் மொட்டை அடித்துக்கொண்டால் புதிதாக வளரும் முடி அடர்த்தியாகவும், கருகருவென வேகமாக வளரும் என்கிற எண்ணம் உள்ளது. ஆனால் இந்த எண்ணம் உண்மையில் பலன் தருகிறதா..? மொட்டை அடித்தால் முடி வேகமாக மற்றும் அடர்த்தியாக வளருமா..?
இதுகுறித்து பிரபல தோல் நோய் நிபுணர் ஷ்ரதா சிங் தனது இன்ஸ்டா பதிவில் அளித்துள்ள தகவல் இந்த எண்ணங்கள் அத்தனையையும் பொய்யாக்கியுள்ளது. அவை என்ன என்பதை பார்க்கலாம்.
அவர் அந்தப் பதிவில் குழந்தைகளின் தலை முடியை மொட்டை அடிப்பதால் ஒருபோதும் அடர்த்தியாகவும், கருகருவெனும் வளராது என்று கூறியுள்ளார். அதற்கான 4 காரணங்களையும் அவர் முன் வைத்துள்ளார்.
தலைமுடி வேர்கள் : தலைமுடியின் தடிமன் மற்றும் அடர்த்தி என்பது அதன் வேர்க்கால்களை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. அது தலைமுடிக்கு அடியில் சருமத்திற்குக் கீழ் உள்ளது. அது முடியின் தண்டு அமைப்பில் மட்டுமே மாற்றத்தை கொண்டுவருமே தவிர வேர்களில் அல்ல.
தற்காலிக மாற்றம் : தலைமுடியை ஷேவ் செய்வதால் அதன் வளர்ச்சியின் போது தடிமனாகவும், அடர்த்தியாகவும் இருப்பது போல் தோன்றும். ஆனால் அது தற்காலிகம் மட்டுமே. தலைமுடியின் அமைப்பில் வளர்ச்சியில் எந்த மாற்றமும் இருக்காது.
மரபணு மற்றும் ஹார்மோன் : முடி வளர்ச்சி என்பது மரபணு மற்றும் ஹார்மோனை பொறுத்தே இருக்கும். அதுவே ஒருவருடைய முடி அடர்த்தியாகவும் , வேகமாகவும், தடிமனாகவும் வளர்வதை தீர்மானிக்கிறது. எனவே நீங்கள் மொட்டை அடிப்பதால் அவற்றை மாற்றிவிட முடியாது.
அறிவியல் ஆய்வுகள் : “ஜர்னல் ஆஃப் இன்வெஸ்டிகேட்டிவ் டர்மடாலஜி” நடத்திய ஆய்வு ஒன்றில் தலைமுடியை மொட்டை அடித்துக்கொள்வதால் அதன் வளர்ச்சியில் , அடர்த்தியில், முடியின் தடிமனில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்று உறுதி செய்துள்ளது.
எனவே முடி வளர்ச்சிக்காக குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது என்பது கட்டுக்கதைகளேயன்றி உண்மை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் தோல் நோய் நிபுணர் ஷ்ரதா சிங்.